ஆடம்பரமான ஜமீன் குடும்பம். ஆழ்ந்து அனுபவிப்பதற்கு எக்கச்சக்கமான சொத்து. ஆள், அம்பு, சேனை வசதிகளோடு, சொந்த பந்தத்தோடு கூடிய ராஜ வாழ்க்கை. இப்படியான கருவூர்கோட்டை ஜமீன் பரம்பரையில், 1859ஆம் ஆண்டு சித்திரை மாதம் 28-ம்தேதி புனர்பூச நட்சத்திரத்தில், ஓர் ஆண்வாரிசு பிறக்கிறது. அந்தக் குழந்தைக்கு தொட்டிலில் இருந்து சாப்பிடும் தட்டு வரை அனைத்தும் தங்கம், வெள்ளி. அணிந்து மகிழ பட்டு, பீதாம்பரங்கள், வைர, வைடூரிய அணிகலன்கள் என ஆனந்தமான வாழ்க்கை.
அந்த அதிர்ஷ்டக்காரக் குழந்தைக்கு முத்து எனப்பெயரிட்டு பெற்றோர்கள் செல்லமாக வளர்த்து வருகிறார்கள். அந்த ஜமீன் குடும்பத்திற்கு ஒருமுறை வருகைதந்த இராமலிங்க வள்ளலார் சுவாமிகள் அந்தக் குழந்தையைப் பார்க்கிறார். பார்த்த மாத்திரத்தில் அவர் அந்தப் பெற்றோர்களிடம், ‘இந்த ஜமீன் வாழ்க்கை இவனுக்கு நிரந்தரம் அல்ல. இவன் ஒரு தெய்வக் குழந்தை. இந்த ராஜ வாழ்க்கைக்கு நேர் எதிரான மிக, மிக எளிமையான வாழ்க்கையைத்தான் இவன் ஆயுள் முழுக்க வாழப் போகிறான்’ என்கிறார். மகான் அல்லவா…. அவருடைய வாக்கு அப்படியே பலித்தது.
சிலஆண்டுகள் கழித்து முத்து சிறுவனாக இருக்கும்போதே அவனின் தாயும், தந்தையும் அடுத்தடுத்து காலமானார்கள். என்னதான் வசதி வாய்ப்புக்கள், கவனித்துக் கொள்ள ஆட்கள் என அனைத்தும் இருந்தாலும், அம்மா அப்பா இல்லாத வாழ்க்கை முத்துவை வாட்ட ஆரம்பித்தது. எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு தனிமை, வெறுமை முத்துவை அலைக்கழித்தது. முத்து, இன்னதென்று விவரிக்க முடியாத மனக்குறையில், அமைதியைத் தேடி தனது 16ம் வயதில் வீட்டை விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி, பழனி மலைக்கு வந்து சேர்ந்தார். அங்கு அனாதையைப் போல அலைந்து திரிந்து கொண்டிருந்தவர், தவத்திரு அழுக்கு சுவாமிகளின் கண்களில் படுகிறார்.
Add Comment