‘தம்பி, அக்கா ரோஸ்மில்க் வாங்கித் தரேன்டா’ என்று சொல்லிக் காரியம் சாதிப்பதெல்லாம் பூமர்கள் காலம். ஆரஞ்சு, நீலம், இளம்பச்சை எனப் பல வண்ணங்களில் கவருகிற மொஹிட்டோக்கள் வழியாகத்தான் ஈராயிரக் குழவிகளை அணுக முடியும். ஆனால் இன்றும் குளிர் பானம் என்றாலே பீட்சா ஹட் முதல் பெட்டிக்கடைக்காரர் வரை முதலில் தருவது கோக கோலா அல்லது பெப்சியைத்தான். இப்பேர்ப்பட்ட பானங்களுக்குப் போட்டியாக வந்திருக்கிறது மிலாஃப் கோலா.
பேரீச்சம் பழத்தாலான உலகின் முதல் குளிர்பானத்தை அறிமுகம் செய்திருக்கிறது சவூதி அரேபியா. உள்ளூரில் விளையும் உயர்தர பேரீச்சம் பழத்தைக் கொண்டு உலகத் தரத்தில் ஒரு குளிர்பானம். செயற்கையாக இனிப்பூட்டிகள் தேவையில்லை என்பதால் சர்க்கரை ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனாலேயே இது ஆரோக்கிய அட்டவணையில் முந்திக் கொள்கிறது. பேரீச்சம் பழத்திலுள்ள நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகளால் இதுவரை இப்படியொரு ஆரோக்கிய பானம் இருந்ததில்லை என்றும் பெயர் வாங்கித் தருகிறது. தீவிரமாக விளம்பரப்படுத்தப்பட்டால் உலகச் சந்தையில் தற்போதைக்கு இதற்குப் போட்டியில்லை.
இதை எப்படிச் செய்வதென எழுதுவது எளிதாக உள்ளது. பேரீச்சம்பழங்களை தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். வெந்து மிருதுவாகியிருக்கும் பழங்களை மசாஜ் செய்வது போல மசித்து, மெல்லிய துணியால் வடிகட்ட வேண்டும். துணியிலிருக்கும் பேரீச்சம்பழ உருண்டையைத் தூக்கிப் போட்டுவிட வேண்டும். அடடா, வட போச்சே என்று கவலைப்படக் கூடாது. வடிகட்டிய தண்ணீரை மட்டும் அடுப்பில் காய்ச்ச வேண்டும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சம்பழத்தின் மேல் தோலைச் சிறிதாக நறுக்கி (வெள்ளைப் பகுதியில்லாமல்) வாசனை திரவியம் போலத் தெளித்துவிட வேண்டும். பழங்களை வடையைப் போலத் தூக்கி எரியாமல், பத்திரப்படுத்துங்கள். ஒருவேளை நாம் தயாரிக்கும் மிலாஃப் கோலா கைகொடுக்காவிட்டால், இவையாவது மிஞ்சும். கொரகொரப்புக்குக் கொஞ்சம் முழு கொத்துமல்லி விதைகள், பட்டை, ஜாதிக்காய் தூள் சேர்த்து பாகு போன்ற பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். நீங்கள் பொறுமையின் எல்லைக்குச் சென்ற பிறகு, அடுப்பையும் உங்களையும் அணைத்து விடுங்கள்.
Add Comment