வருடம் 1946. சோவியத்தின் 75% சதவிகித எண்ணெய் தேவைகளை அசர்பைஜான் தான் பூர்த்திசெய்துகொண்டிருந்தது. அப்போது அசர்பைஜான் சோவியத் யூனியனின் அங்கம். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் எண்ணெய் இருப்பு மும்மடங்காக அதிகரித்திருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கட்டளையிடவே, வளங்களைக் கண்டடையும் பணிகள் உடனே முடுக்கிவிடப்பட்டன.
முதலாம் உலகப்போர்க் காலத்தில் அசர்பைஜானிலிருந்து மட்டும் நூற்றெழுபத்தைந்து மில்லியன் பேரல்கள் எண்ணெய் எடுக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டு மீண்டும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எண்ணெய் வளங்களைக் கண்டறியும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அது நவம்பர் ஒன்பதாம் தேதி. நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. காஸ்பியன் கடல் பகுதிகளில் கரும்பாறைகளுக்கு இடையில் பணியில் ஈடுபட்டிருந்த குழுவுக்குச் சமிக்ஞை கிடைத்தது. ஆயிரத்து நூறு மீட்டர் ஆழத்தில் எண்ணெய் இருப்பது உறுதியானது. ஸ்டாலினுக்குத் தகவல் போனது. உடனே அங்கே வேண்டியவற்றைச் செய்யுங்கள் எனப் பதிலும் வந்தது. உலகின் முதல் கடலோர எண்ணெய் தளம் கட்டமைக்கப்பட்டது இப்படித் தான். இது ஸ்டாலின் உருவாக்கிய அட்லாண்டிஸ்.
நான்காம் நூற்றாண்டிலிருந்தே அசர்பைஜான் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதற்கான பதிவுகள் மார்கோபோலோவின் பயணக்குறிப்புகளில் இருக்கின்றன. எனினும் சோவியத் காலத்தில் தான் சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. தலைநகர் பாக்குவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் கடலில் ஓரிடம். பக்கத்துக் கடற்கரை என்பது ஐம்பத்தைந்து கிலோமீட்டர்கள் தள்ளியிருந்தது. அங்கு தான் மிகப் பிரமாண்டமான கட்டுமானத்தை, ஒரு செயற்கை தீவைக் கட்டியெழுப்பத் திட்டம் தீட்டினார்கள்.
Add Comment