Home » நீ வேறு, நான் வேறு – 40
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 40

40. நேற்று இல்லாத மாற்றம்

புதிய ஆளுநர் மூசா கானின் கணக்கு, செயல்திட்டம் இரண்டுமே சரியானவை; சிறப்பானவை. அதில் சந்தேகமில்லை. ஆனால் பாகிஸ்தானை நம்புவதற்கு பலூச்சிகளுக்கு எந்த நியாயமும் இல்லை அல்லவா? தமது சரித்திரம் முழுவதும் ஏமாற்றங்களாலும் நம்பிக்கை மோசடிகளாலும் அலைக்கழிக்கப்பட்டவர்கள் அவர்கள். 1948 தொடங்கி அந்த இருபது ஆண்டுகளில் மட்டும் அவர்கள் இழந்தவை அநேகம். உயிரிழப்பு, பொருள் இழப்புகூடப் பொருட்டில்லை. தலையெழுத்து என்று எண்ணிக்கொண்டுவிட முடியும். ஆனால் பாகிஸ்தான் அரசு சார்பில் யார் சமரசம் பேச வந்தாலும் இவன் ஒரு துரோகியின் பிரதிநிதி என்ற எண்ணமே அவர்களுக்கு மேலோங்கி நின்றது. இல்லவே இல்லை என்று தலையில் அடித்து சத்தியம் செய்தாலும், ஓஹோ அப்படியா என்பார்களே தவிர, ஏற்க மாட்டார்கள். அது குவெத்தாவில் பிறந்து வளர்ந்த மூசா கானாகவே இருந்தாலும் சரி.

எப்படியாவது ஷெர் முஹம்மது மர்ரியை ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசிவிட முடிந்தால் எல்லா சிக்கலும் தீர்ந்துவிடும் என்று மூசா கான் நினைத்தார். பொறுப்பேற்ற நாள் முதல் அதற்குத்தான் அவர் முயற்சி செய்தார். ஆனால் பலூசிஸ்தானில் ஒரு பல்லி, கரப்பான்பூச்சிகூட அவர் இருக்கும் இடம் தெரிந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. தவிர, நான்காண்டுகளாக ஒருநாள் விடாமல் பாகிஸ்தான் ராணுவம் அங்கே நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களாலும் செய்த அட்டூழியங்களாலும் வெறுப்புற்றிருந்த மக்கள், அரசுப் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு யார் வந்தாலும் முகத்தில் கதவை அடித்து மூடுகிற முடிவிலேயே இருந்தார்கள்.

அந்தப் பக்கம் பாகிஸ்தானில் அப்போது அயூப் கானின் ஆட்சிக்காலம் முடிவை நெருங்கிக்கொண்டிருந்தது. ஒப்பீட்டளவில் அவர் இதர ராணுவ ஆட்சியாளர்களைவிடப் பரவாயில்லை ரகமே என்றாலும் அவரால் பலூசிஸ்தான் மட்டுமல்லாமல், மேற்கு பாகிஸ்தானின் எந்தப் பகுதியிலும் ஏற்பட்ட கிளர்ச்சிகளையும் மக்கள் போராட்டங்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு மிக முக்கியமான காரணம், ஜுல்பிகர் அலி புட்டோ.

புட்டோ ஒரு பெரும் மக்கள் தலைவராக அன்றைக்கு முழுதாக உருவெடுத்திருக்கவில்லை என்றாலும் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தார். அவர் ஒரு பக்கம் நாடெங்கும் மக்களைத் தூண்டிவிட்டு, அயூப் கானுக்கு எதிரான விமரிசனங்கள் எப்போதும் ஜீவத் துடிதுடிப்புடன் பொங்கிப் பெருகும்படிப் பார்த்துக்கொண்டார். இதன் விளைவும் பலூசிஸ்தான் தவிரவும் அயூப் மீதான அதிருப்தி வேறு பல இனங்களில் பல்கிப் பெருகி, நாடெங்கும் அவருக்கு எதிரான ஊர்வலங்களும் கண்டனக் கூட்டங்களும் நடக்கத் தொடங்கின. இதற்கு அறுபத்தைந்தில் நடந்த இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தில் அடைந்த தோல்வியும் ஒரு பெரும் காரணம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!