தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டுக்கு ஒரு வாரகால பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பயணத்தின்போது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் தவெக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டில் தொழில் வளத்தைப் பெருக்குவதற்கான முயற்சிகளைத் தமது அரசு செய்து வருவதாக அத்துறையின் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்திருந்தார். அதற்கேற்ப, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் அறுபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் புதிய தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் விஜய் முன்பு கையெழுத்தானதாக செய்திகள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து, தற்போது வெளிநாட்டு நிறுவனங்களை அந்நாடுகளுக்கே நேரடியாகச் சென்று சந்தித்து முதலீடுகளைக் கோரும் பயணமாக இப்போது முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு தங்கியிருக்கும் ஒருவார காலத்தில் அவர் முதலீடுகளை ஈர்ப்பதோடு, மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் குறித்தும், மோட்டார் வாகன விளையாட்டுகளுக்கான உள்கட்டமைப்பு தொடர்பாகவும் ஆய்வுகளைச் செய்யவுள்ளார்.
















Add Comment