விபத்து நடந்து நாற்பதாண்டுகளுக்குப் பிறகு போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் பணி ஜனவரி கடந்த வாரம் தொடங்கியது. முழுவதுமாகச் சீல் வைக்கப்பட்ட பெரிய கன்டெயினர் லாரிகளில் போபாலிலிருந்து இருநூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிதாம்பூர் என்ற பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. நூறு நபர்கள் சுழற்சி அடிப்படையில் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக் கிழமையிலிருந்து கழிவுகளைப் பாதுகாப்பாகப் பேக் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். 337 மெட்ரிக் டன் எடையுள்ள நச்சுக் கழிவுகள் இப்படி வெளியேற்றப்பட்டுள்ளன. மூன்றிலிருந்து ஒன்பது மாதங்களுக்குள் அனைத்து கழிவுகளும் எரிக்கப்படும். சாம்பலில் நச்சுத்தன்மையில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு பாதுகாப்பான முறையில் புதைக்கப்படும்.
மனித இனம் கண்ட உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை விபத்து தான் போபாலில் 1984ஆம் ஆண்டு நடந்த யூனியன் கார்பைடு விஷவாயுக் கசிவு. டிசம்பர் மூன்றாம் தேதி இரவு. மறுநாளிலிருந்து தங்களது வாழ்க்கையே மொத்தமாக மாறப்போவது தெரியாமல் தான் உறங்கச் சென்றனர் போபால் மக்கள். அதற்கான அறிகுறிகள் அன்றைய இரவு ஒன்பது மணியிலிருந்து தெரிய ஆரம்பித்தன. ஒன்பது முப்பது மணிக்குப் பிளீடர் வால்வு ஒன்று அடைத்துக்கொண்டு குழாய்களின் வழியே செல்லும் வாயுவின் அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்தது. அது படிப்படியாக உயர்ந்து 11.30க்கு மிக லேசான கசிவை தொழிலாளர்கள் உணர ஆரம்பித்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் குழாய்களின் அழுத்தம் சமாளிக்க முடியாத அளவு உயர ஆரம்பிக்கவே வாயுக் கசிவு அபாயம் குறித்த சங்கொலி ஒலித்தது.
Add Comment