மூன்றாவது முறையாக பிரதமர் ஆகும் வாய்ப்பு மோடிக்குக் கிட்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெருங்கட்சியாக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் பாருங்கள், தோல்வியடைந்த காங்கிரஸ் தரப்பில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். காலை எட்டு மணிக்கே பட்டாசுச் சரம், சிவப்புக் கம்பள விரிப்பெல்லாம் தயாராக இருந்தும் இரவு எட்டு மணிக்கு மேல்தான் மோடி வெளியில் வந்து பேசினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஐம்பதற்கும் மேற்பட்ட தொகுதிகளை இழந்துள்ளது பாஜக. ஆனால் வாக்குகளின் சதவிகிதத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. கிட்டத்தட்ட அதே எண்கள்தான். அப்புறம் என்ன? முதலில் தெற்கில் இருந்து வருவோம். தமிழ்நாட்டில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று அண்ணாமலை ஓயாமல் சொல்லிக் கொண்டே இருந்தார். தமிழர்கள் எதிர்பார்த்தது போலவே மதச்சார்பின்மை, மாநில உரிமை, வளர்ச்சி கோஷத்துக்கு வாக்களித்துள்ளார்கள். வழக்கமாக ஆதரவு கொடுக்கும் சாதியையும் நிராகரித்தது ஒன்றே எதிர்பாராதது. கடைசியில் 40 தொகுதியும் திமுகவே வென்றது. இருந்தாலும் வாக்கு சதவிகிதத்தில் பத்தைத் தாண்டியுள்ளது பாஜக.
பக்கத்து மாநிலமான கேரளாவில் சுரேஷ் கோபி வெற்றியால் முதன் முறையாக கேரளத்தில் கால் பதித்துவிட்டது. முன்னேற்றம்தான். கர்நாடகாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற கையோடு பல நலத்திட்டங்களையும் செயல்படுத்தி இருந்தது. கடந்த தேர்தலில் கிட்டதட்ட மொத்தத் தொகுதியும் பிஜேபி வசம் சென்று விட்டதால் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் எத்தனை வென்றாலும் பிஜேபியின் கணக்கில் குறையத்தான் செய்யும். எக்சிட் போல் சொன்ன கணக்குகள் பிஜேபி அதிக தொகுதிகளை வெல்லும் என்பதே, களநிலவரம் அது இல்லை என பெண்களுக்கு மாதம் ஆயிரம் நலத்திட்ட உதவி கொடுக்கும் காங்கிரஸ் அடித்துச் சொன்னது. கூடவே பிரஜ்வல் ரேவன்னாவின் ஆபாச வீடியோக்களும் சேர்ந்து கொள்ள இங்கே கணிசமான தொகுதிகளை இழந்தது பாஜக.
Add Comment