நான்கு வருடங்களுக்கு முன்னர் இவரது தலைமையின் கீழ் அதிகப்படியான பாராளுமன்ற உறுப்பினர்களோடு பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான பொதுஜன வாக்கெடுப்பில் விலக வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதில் முன்னணியில் நின்று அரசியல் அவதானிகள் அனைவரது எதிர்வுகூறலையும் தகர்த்தெறிந்து பிரெக்சிட் வெற்றி பெறுவதற்கான காரணகர்த்தாக்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். இப்படியாகப் பிரபலம் வாய்ந்த ஒரு அரசியல்வாதி இன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகையான பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கான அனுமதிச் சீட்டு மறுக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுவார் என்று எந்தவொரு அரசியல் வித்தகரும் எதிர்வு கூறியிருக்க முடியாது. இந்நிலைக்குத் தள்ளப்பட்ட அரசியல்வாதி முன்னாள் பிரித்தானியப் பிரதமரும், முன்னாள் லண்டன் மாநகரத்து மேயரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய போரிஸ் ஜோன்சன்.
அரசியலில் உச்சத்திலிருந்த போரிஸ் ஜோன்சன் எப்படி அதல பாதாளத்திற்குத் தள்ளப்பட்டார்? இந்தக் கேள்விக்கான பதில் கொரோனா வைரஸ்தான். இந்தக் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைப்பாரா எனும் ஐயம் கொள்ளும் நிலைமைக்குப் போய்த் தப்பி வந்தார். ஆனாலும் அந்த வைரஸின் தாக்கம் வேறொரு வடிவில் வந்து அவரது அரசியல் வாழ்க்கைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Add Comment