பதினேழு வருட கால ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை மீட்டிப் பார்த்தால் தெரியும்.சர்வதேசத்தில் இலங்கையை நரமாமிசம் சாப்பிடும் அகோரிகள் வாழும் தேசம் போல மாற்றிவிட்டுத்தான் அதன் தலைவர்கள் ஓய்ந்து போனார்கள்.உலகத்திற்கு அதிகளவில் அகதிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாய்ப் போனது இலங்கை. அரச வளங்கள் அடிமாட்டு ரேட்டுக்குத் தனியாருக்கு விற்றுத் தீர்க்கப்பட்டுக் கொண்டிருந்தன. அதிகாரத் துஷ்பிரயோகங்களும், படுகொலைகளும், ஊடக அடக்குமுறைகளும் அடையாளங்களாகிப் போய் இருந்தன.போதாக்குறைக்கு வெறும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டிய தமிழர் பிரச்னையும் பூதாகரமெடுத்து ஒரு கெரில்லாப் போராய் உருவெடுத்து நின்றது. ‘ஜே.வி.பி கலவரத்தை அடக்குகிறேன் பேர்வழி’ என்று ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைக் கொன்று குவித்து இருந்தது அரசு.
ஆனால் ஒரு ஆட்சி தலை குப்புற விழ இத்தனை காரணங்களும் மட்டும் போதாது. மக்களை சரியான முறையில் வழி நடத்த ஒரு அரசியல் தலைமை கட்டாயமாய்த் தேவை. அரச அடாவடிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் பயந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சேலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தது. மகிந்த ராஜபக்சே தனியனாய்ப் போராடி சிறை சென்று , மக்கள் அபிமானத்தையும், ஊடகவியலாளர்களின் மனங்களையும் வென்று மிகக் காத்திரமான பங்களிப்பைச் செய்ததும் ஐக்கிய தேசியக் கட்சியின் அஸ்திவாரம் பெயர்த்து எடுக்கப்பட மிக முக்கிய காரணங்களில் ஒன்றானது. மகிந்தவின் அபாரமான உழைப்போடு ஒப்பிடும் போது பிரதமர் சந்திரிக்காவும் சரி, வீல் சேரில் உட்கார்ந்து இருந்த கட்சியின் தலைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் சரி பெரும் பூச்சியங்கள் மட்டுமே. சந்திரிக்கா கொழும்பில் இருந்த நாள்களை விட லண்டனில் இருந்த நாள்கள் தான் அதிகம். சரி, கடைசி நேர வெற்றிக்கு உரிமை கோர ஆட்களுக்கா பஞ்சம்.கட்சியின் கடிவாளமோ ஸ்ரீமாவோ வசமிருந்தது.ஆகவே சந்திரிக்கா குடும்பத்தின் கை இலங்கை அரசியலில் ஓங்கத் தொடங்கியது.
Add Comment