‘மகிந்த ராஜபக்சே என்பவர் ஓர் இனவாதி அல்ல, அவரைப் போன்ற முஸ்லிம்களின் நண்பன் யாரும் இல்லை. அவரது உறவினர்கள்கூட தமிழ்க் குடும்பங்களில் மாப்பிள்ளை எடுத்து இருக்கிறார்கள். அவரது சிங்களத் தேசியவாதம் என்பது வெறும் வேஷம்’ என்றுதான் மகிந்த ராஜபக்சேவுடன் மிகவும் நெருங்கிப் பழகிய சிறுபான்மையினத்தவர்களின் அபிப்பிராயமாய் இருக்கும். இச்சிறுபான்மை என்பது ஒரு ஆயிரத்திற்குள் என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்க அம்சம். இவர்கள் மகிந்தவுடன் விருந்துண்டு மகிழ்ந்தவர்களாக இருப்பார்கள், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தம் வர்த்தக சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியவர்களாய் இருப்பார்கள். இதில் சில முஸ்லிம் மதகுருக்களும் அடக்கம். அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வரும் இமாம்கள் போல இப்படியான ஆச்சர்யப் பேர்வழிகள் எங்கும் இருக்கிறார்கள்.
மகிந்தவின் நெருங்கிய அடிவருடிகள் கதை கதையாய் அளக்கும் சிறுபான்மை ப்ரியம் என்பதுகூட ஒரு அரசியல்தான். இதற்கு மிக நல்லதொரு உதாரணம் ரணில் – பிரபாகரன் சமாதான உடன்படிக்கையில் மகிந்தவின் வகிபாகம். சமாதானப் படலத்திற்குள் நுழையு முன்னர் மகிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் போராட்டத்திற்கு என்னவானது என்று பார்த்துவிடலாம். 2001-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆளும் சுதந்திரக் கட்சி தோற்றுப் போன சரிதத்தைக் கடந்த வாரம் பார்த்தோம். மகிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைச் சந்திரிக்கா கொடுக்காமல் சீண்ட பதிலுக்கு மகிந்தவும் தம் ஆஸ்தான தோஸ்த்துகளைப் பயன்படுத்திக் கொண்டு அறிக்கைகளை விடத் தொடங்கினார்.
Add Comment