சில வருடங்களுக்கு முன்பு இலங்கையில் ஏதோ ஒரு பள்ளித் தேர்வு வினாத்தாளில் இப்படி ஒரு கேள்வி இருந்தது. பின்வரும் நபர்களில் சமாதானத்திற்கு நோபல் பரிசைப் பெற்றவரைத் தேர்வு செய்க. வினாவுக்குக் கீழே நான்கு விடைகள் தரப்பட்டிருந்தன. நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, பில் கிளிண்டன், மகிந்த ராஜபக்சே.
இதற்கு மண்டேலா என்று விடை அளிப்பது அல்ல விஷயம். அதென்ன மகிந்த ராஜபக்சே. மகிந்த ராஜபக்சே மீது கொண்ட அப்பழுக்கற்ற பக்தியால் இப்படியொரு கேள்வி தயாரிக்கப்பட்டதா, அல்லது அவல நகைச்சுவையாக தயாரிக்கப்பட்டதா என்று தெரியாது. எப்படியோ சோஷியல் மீடியாவில் நெட்டிஷன்கள் வறுத்து எடுத்துவிட்டார்கள்.
இங்கே நக்கலுக்கும், வெடி ஜோக்குக்கும் அப்பால் ஒரு விஷயம் இருக்கிறது. மகிந்த ராஜபக்சே தனக்கு முன்னைய தலைவர்களால் நிறுத்த முடியாமல் போன யுத்தத்தை எந்தவித போர் நெறிமுறைகளையும் பின்பற்றாமல் அழித்தொழித்து நிறுத்தியவர். போரை நிறுத்துமாறு கடைசி நேரத்தில் தூது வந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லி பேண்டிடமும், நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹேய்மிடமும், “நான் புரிவது போரல்ல, தீயவரை அழிக்கும் வேள்வி” என்று படு தெனாவட்டாய்க் கூறித் திருப்பி அனுப்பியவர். உண்மையில், கடவுளே அன்று அவர் முன் தோன்றி நிறுத்துமாறு சொன்னாலும் நிறுத்தும் நிலையில் அவர் இருக்கவில்லை. அப்படி நிறுத்த அவர் தம்பி கோட்டாபய விடப் போவதுமில்லை.
Add Comment