சென்னைப் புத்தகக் கண்காட்சி களைகட்டியிருக்கிறது. இம்முறை புத்தாண்டுக்கு முன்னரே ஆரம்பித்து பொங்கலுக்குள் நிறைவு பெறும் புதிய அட்டவணையோடு. எப்போது வேண்டுமானாலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை உருவாக்குவேன் என்று மிரட்டிக்கொண்டிருந்த காலநிலையை எதிர்த்து வென்றது அதன் முதல் வெற்றி.
தொடக்கவிழாவிற்காக மழைச்சேற்றின் மேல் தற்காலிக மணல் கொட்டப்பட்டுக் கொண்டிருந்ததுதான் முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சி. நாளைக்குள் நான் செம்புலப்பெயல் நீராக மாறுகிறேனா இல்லையா பார் என்று அதுவும் பூடகமாகச் சிரித்துக் கொண்டிருந்தது. தற்காலிகம் நிரந்தரத்தோடு கலந்து கட்டாந்தரையாகவே ஒரு வாரம் கழித்தும் நீடிப்பது இரண்டாவது வெற்றி.
ஏதேனும் புதுமையாகச் செய்யவேண்டும் என்று பபாசி கூட்டத்தில் பேசியிருந்திருப்பார்கள் போல. எப்போதும் இடமிருந்து வலமாகப் பாதைகளை எண்ணுவதுதானே மரபு. இந்தமுறை அது வலமிருந்து இடமாகத் தொடங்கியிருந்தது. எங்கே இருக்கிறாய் என்று கேட்பவர்களுக்கு முதல் வரிசை என்றால், அது கடைசியிலிருந்து ஆரம்பிக்கும் முதல் வரிசைதான்றது கூடவா தெரியாது என்று தத்துவார்த்தப் பாடம் நடத்திக்கொண்டிருந்தனர் தினசரி வருகையாளர்கள். `உங்கள் மொபைல், பொருள்கள் மற்றும் குழந்தைகளை` பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும் என்ற அடிக்கடிச் செய்யப்படும் அறிவிப்பு, தத்துவார்த்தப் புதுமையின் அடுத்த நிலை.
அகலமான நடைபாதை, தடையில்லாத வெளிச்சம் இரண்டும் இந்த முறை நிறைவாகச் செய்யப்பட்டிருந்தது. ரெமோ போல முழு ஒப்பனையுடன் முதல் வரிசையில் நுழைபவர்கள், ஒன்பதாவது பாதையில் அந்நியனாக வெளிவரும் வேலையை அரங்குக்குள் இருந்த காற்றோட்டச் சீரின்மை கவனித்துக்கொண்டது. இத்தனை பெரிய அரங்குகள் அமைக்கும்போது உள்வரும் காற்று, வெளிச்செல்லும் காற்றின் அளவைக் கணித்து அதற்கேற்றாற்போல ஏற்பாடுகள் செய்திருக்கலாம். இதைப் பற்றி ஏற்பாட்டாளர் ஒருவரிடம் பேசியபோது, போனமுறை அப்படிப் பண்ணின்னாலதாங்க மழையால் அரங்கத்துக்குள்ள தண்ணி வந்துடுச்சு என்றார். சரிதான் என்று நகர்ந்தோம்.
Add Comment