இது சிவராத்திரி நெருங்கும் நேரம். தமிழ்நாட்டின் ஆகப்பெரிய சிவத்தலத்தை ஒரு வலம் வருவோம்.
சைவர்கள் கோயில் என்று பொதுவாகச் சொன்னால் அது சிதம்பரம் நடராஜர் கோயிலைத்தான் குறிக்கும். அதேபோல் வைணவர்கள் கோயில் என்றால் அது திருவரங்கத்தைக் குறிக்கும். கடலூரின் பெருமைகளுள் தலையாயது சிதம்பரம் நடராஜர் கோவில்.
சிதம்பரம் ஆதியில் தில்லை மரங்கள் நிறைந்த காடாக இருந்துள்ளது. எனவே இவ்வூரின் பெயர் தில்லை வனம். இன்றைய பிச்சாவரத்தைத் தவிர இங்குள்ள வனம் முழுவதும் அழிக்கப்பட்டதால் தில்லை எனச் சுருங்கியது. இந்தத் தில்லையில் அமையப்பெற்ற ஆலயம் தான் சித் அம்பரம். அதாவது சித் என்பது அறிவைக் குறிக்கும். அம்பரம் என்பது ஆகாயத்தை உணர்த்தும். அறிவாகிய வெட்டவெளி என்பதுதான் பொருள். இந்த சித் அம்பரம் தான் மறுவி பின்னாளில் சிதம்பரம் ஆகியிருக்கிறது. இந்தக் கோவிலின் பெயரே பின்னாளில் ஊர்ப் பெயராகவும் மாறியிருக்கிறது. ஏனெனில் இப்போதுதான் அங்கு தில்லை மரங்கள் இல்லையே. ஆனால் தில்லையின் நினைவாக இன்றும் அங்குள்ள நடராஜரைத் தில்லை நடராஜர் என்றும், காளியைத் தில்லைக் காளி என்றும் அழைக்கிறார்கள்.
Add Comment