எமக்குச் சிறுவயதில் டிசம்பர் 25 வருடத்தில் இன்னுமொரு நாளாகவே இருந்தது. குண்டாக ஜனவரியில் ஆரம்பித்து ஒருசில தாள்களே எஞ்சி நலிந்திருக்கும் நாட்காட்டியில் 24ம் தேதியைக் கிழித்தெடுக்கும் போது நத்தார் பண்டிகை எனும் அறிவிப்போடு பொது விடுமுறை நாள் எனவும் பறைசாற்றும். அதற்கு மேலாக யாரோ சொல்லி நாமறிந்த மேலதிக விபரம் அது ஏசுநாதரின் பிறந்த தினம். கிறிஸ்தவர்கள் அதனைக் கொண்டாடுகிறார்கள் என்பது.
எமது சிறுவயதுக் காலத்தில் பள்ளியில் ஒருசில கிறிஸ்தவ நண்பர்கள் இருந்தபோதும் வீட்டுக்குப் போய் அவர்கள் கொண்டாட்டங்களில் பங்கெடுக்கும் அளவு நெருங்கிய நண்பர்கள் யாருமிருக்கவில்லை. அதனால் அக்காலத்தில் அந்நாள் நம் வாழ்வில் ஒரு சாதாரண நாளே. பல்கலைக்கழகத்தில் ஒரு கிறிஸ்தவ நண்பன் நெருங்கிய நண்பனாக வாய்க்க, அக்காலத்தில் அவன் வீட்டில் நத்தார் தினத்தன்று போய் ஓரிரு தடவைகள் வயிற்றை நிரப்பியதுண்டு. இணையம் என்பதில்லாத காலமென்பதால் வேறு நாடுகளில் இந்நாளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த நாம் அறிந்திருக்கவில்லை. இது மட்டுமல்ல…. அக்காலத்தில் கொண்டாடப்படும் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் போன்ற தினங்கள் எதுவும் நாமறிந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Add Comment