சரித்திரத்தை முகர்ந்தபடி சமகால வீதிகளுக்குள் நுழைவது ஓர் அனுபவம். எத்தனையோ வீதிகள், எவ்வளவோ சந்தைகள், ஆயிரமாயிரம் கதைகள். வீதிகளின் பெயர்களிலேயே அடையாளத்தைப் புதைத்து வைப்பார்கள் முன்னோர்கள். பவழக்கார வீதி முன்னொரு காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? மலை மலையாகப் பவழங்கள், முத்துகள், ரத்தினங்களைக் கொட்டிக் குவித்து விற்பனை செய்திருப்பார்களா? வந்து வாங்குவோர் யாராக இருந்திருப்பார்கள்? ஆனால் இன்று அதெல்லாம் இல்லை. உணவகங்கள், மளிகை கடைகள், ஸ்டேஷனரி கடைகள், சூப்பர் மார்க்கெட் போன்றவை இருக்கின்றன. இதற்காக ‘சந்தைத் தெரு’ என்று சொல்ல முடியாதபடி வீடுகளும் கடைகளுமாக கலந்திருக்கின்றன.
வீடுகளைப் பொறுத்தவரை கலைநயத்தோடு கூடிய பழைய வீடுகளாக இருக்கின்றன. பர்மா வீடு என்ற பெயர்ப் பலகை தாங்கிய சத்திரம் போன்ற வீடு, நாட்டுக்கோட்டைச் செட்டியார் சத்திர வீடு, கிருஷ்ணர் கோயில், பஞ்ச பூதங்களில் காற்றுக்கான காளஹஸ்தி கோயில் போன்றவை இருந்தன. அகலமில்லாத சாலை என்பதை விட சாலையின் எல்லையில் வீடுகள் அல்லது கட்டடங்கள் செங்குத்தாகத் தொடங்கிவிட்டன. எனவே வாகனங்கள் நிறுத்த இடமின்றிச் சாலையின் இருபுறமும் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. கார் போன்ற பெரிய வாகனங்கள் உள்ளே சென்றுவர வசதி இல்லை. ஆனால் சைக்கிள் ரிக்ஷா தெருவில் சென்றது. ஒரு பெண்ணை அமரவைத்து வயதான மனிதர் மிதித்துக்கொண்டு சென்றார். மூன்று சக்கர சரக்கேற்றும் சைக்கிள்கள் நின்றுகொண்டிருந்தன. அது மாலை நேரம் என்பதால் மிதிப்பவர் அதன் மீது படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். தற்கால ஆட்டோகளும் நின்றுகொண்டிருந்தன.
Add Comment