பெங்களூருவைச் சேர்ந்த பதினேழு வயதுச் சிறுவன் சிவலிங்கா. பள்ளிக்குச் சென்று சான்றிதழ்களை வாங்கி வருவதாக வீட்டைவிட்டுப் புறப்பட்டவன். அவன் பிறந்ததில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் வெற்றியைக் கோட்டை விட்ட ஆர்சிபி இந்த முறை ஐபில் கோப்பையை வென்றுவிட்டது. எனவே, நண்பர்களுடன் ஆர்சிபியின் வெற்றியைக் கொண்டாடச் சின்னசாமி மைதானத்திற்குச் சென்றான். வெளியே நின்றுகொண்டிருந்தான். முதன்முறையாக வந்த வெற்றிச் செய்தி அவனுக்குப் பரவச உணர்வை அளித்திருக்க வேண்டும். நகரத்தில் வசித்த சிவலிங்கா மட்டுமல்ல, கர்நாடகத்தின் கிராமப்புறங்களிலும் கேட்ட வெடிச்சத்தம் அந்த வெற்றியின் வீரியத்தை உணர்த்தியது.
இந்திய அணி உலகக் கோப்பை வென்றதற்கு நிகரான கொண்டாட்டம் இது. பல ஆண்டு கால வலி. சமூக ஊடகக் காலத்தில் முகம் தெரியாதவர்களின் கேலி, கிண்டலால் கிடைத்த அவமானம். எல்லாவற்றையும் கொண்டாடித் தீர்த்துவிட நினைத்தார்கள் ஆர்சிபி ரசிகர்கள். சிவலிங்காவும் முதல் நாள் இரவு உறங்கியிருக்க வாய்ப்பு குறைவு. மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டான். அதே உணர்வுதான் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்களை அங்கு கூடச் செய்திருந்தது.
கோலியின் ஜெர்சியுடன் செல்ஃபி எடுப்பது, கோஷமிடுவது, குழுவாக நடனமாடுவது, கொடிகளை மேலே அசைப்பது என எல்லாம் மகிழ்ச்சியாகத்தான் சென்றுகொண்டிருந்தன. முதலில் கர்நாடக சட்டமன்றத்திலிருந்து சின்னசாமி மைதானம் வரை திறந்த பேருந்தில் ஊர்வலம் நடைபெறும் என ஆர்சிபியின் சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது. காவல்துறையினர் அதை மறுத்தனர். பின்னர், சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறும், ரசிகர்களுக்காக அனைத்து வாயில்களும் திறந்திருக்கும் என வதந்தி பரவியது.















Add Comment