அரைத்து விட்ட சாம்பார், மைசூர் ரசம், கோஸ் பட்டாணிப் பொறியல், அப்பளம், பால் கொழுக்கட்டை என்று காலையில் விருந்து படைத்திருந்தார் அத்தாட்டி. “சாயந்திரம் எதுவும் செய்ய வேண்டாம் அத்தாட்டி. ராத்திரி பழம் மட்டும் போதும்.” என்று வீறாப்பாகச் சொல்லிவிட்டு மதியம் படுத்து விட்டோம்.
நிறைந்த வயிறு தந்த போதைத் தூக்கத்தை சமையலறையிலிருந்து வந்த சுகந்த வாசனை எழுப்பி விட்டது. “அதான் ஒண்ணும் வேண்டாம்னு சொன்னோமே அத்தாட்டி…” வாய்தான் சொல்லிக் கொண்டிருந்ததே தவிர மூக்கைத் துளைத்த மசாலா வாசனை வயிற்றில் ஒரு சின்னப் பசியைக் கிளறி விட்டது.
ஆங்காங்கே கொத்துமல்லி இலைகளுடன் சதுரவடிவில் தட்டி வைத்திருந்த காய்கறி – மசாலாக் கலவையைத் தாவாவில் போட்டுப் பிரட்டி எடுத்துக் கொண்டிருந்தார் பாட்டி.
“கட்லட்டா அத்தாட்டி இது? காலையில் பாரம்பரியப் பால் கொழுக்கட்டை, மாலையில் மார்டன் கட்லட்டா? கலக்கறீங்க போங்க. இதை எண்ணெயில போட்டுப் பொரிக்க வேண்டாமா?”
Add Comment