2023க்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் அவரது நாற்பத்தைந்து ஆண்டுகாலச் சேவையைப் பாராட்டி அவருக்குக் கடந்த வாரம் இந்தியக் குடியரசுத் தலைவர் அந்த விருதை வழங்கினார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதற்கு முன் 2004இல் மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இந்த விருதைப் பெற்றுள்ளார்.
‘என்னுடைய வாழ்வில் எதையும் நான் தீர்மானித்ததே இல்லை. நமக்கும் மேலே ஓர் இனம் புரியாத மாபெரும் சக்தி இருக்கிறது. அது நம்மைச் செலுத்துகிறது. நடிக்க வந்தது முதல் இப்பொழுது பால்கே விருதுவரை அப்படித்தான் நடக்கிறது. இப்படித்தான் நான் நம்புகிறேன்’ என்று இந்த விருதைப் பற்றிப் பேசும்போது கூறினார் மோகன்லால்.
மோகன்லால் விசுவநாதன் நாயர். பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஏலாத்தூர் என்ற ஊரில் 1960இல் பிறந்த இவருக்குச் சிறுவயது முதலே நடிப்பதில் ஆர்வம் இருந்தது. தன்னுடைய வயதையொத்த மாணவர்களுடன் சேர்ந்து ஓரங்க நாடகங்கள், தெருக்கூத்து போன்றவற்றில் நடித்து வந்தார். நண்பர்கள் மூலம் அவருக்குக் கிடைத்த வாய்ப்புதான் திறனோட்டம் என்ற திரைப்படம்.














Add Comment