வீடு, நிறுவனம், மதம் ஆலயம் அல்லது அரசியல் கட்சி எதுவானாலும் சரி…. பொருளாதாரமும் அதைச் சார்ந்த முடிவுகளும் யாருடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றனவோ அவருக்கே அங்கே அதிகாரம் இருக்கிறது. அதிலும் தாழ்வு மனப்பான்மை உள்ள ஒருவருக்கு அவரின் அதிகாரம், அந்த அதிகாரத்தின் மூல காரணம் அவரிடம் இருக்கிற பணபலம் என்கிறபோது அதை இழக்க வைப்பது அவரைக் கொலை செய்வதைவிட மோசமானது.
அமெரிக்காவில் நேரத்தின் மதிப்பு அதற்கான பொருள் ஈட்டும் மதிப்பைக் கொண்டே அறியப்படுகிறது. இங்கே சாலைவிதிகளை ஒருவர் மதிப்பதற்கு கூட அதை மீறினால் கட்ட வேண்டிய மிக அதிகமான அபராதத் தொகையும் அதன் காரணமாக உயரும் காப்பீட்டுக் கட்டணங்களும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.
என்னதான் பொருள் மீது பற்று இல்லை என்று சொன்னாலும், அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடப் பொருளுக்கு அவசியம் இருக்கிறது. அருளில்லாதோருக்கு இவ்வுலகம் இல்லை என்றால் கூட அந்த அருளைத் தருவதாகச் சொல்லப்படும் ஆண்டவன் வசிக்கும் ஆலயங்கள் கூட பொருள் இருக்கும் அளவைக் கொண்டே பிரசித்தி பெறுகின்றன. திருப்பதியா வாட்டிகனா எதற்கு மிக அதிக வருமானம் என்று பட்டிமன்றம் கூட நடத்தி விடலாம்….
Add Comment