போலி ஏஜன்சிகளிடம் ஏமாந்து வருபவர்கள், கள்ள பாஸ்போர்ட்டில் சிக்குபவர்கள், குருவியாக அகப்பட்டவர்கள் – மாட்டினால் இவர்கள் அனைவருக்கும் துபாயில் சிறைதான் கதி. பிறகு மீட்டெடுப்பது சாதாரண காரியமல்ல. இரண்டு அரசாங்கங்களும் பேசி, ஆவணப் பரிவர்த்தனைகள் செய்து, நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதற்கு ஆயிரம் சடங்கு, சம்பிரதாயங்கள் உண்டு. அப்படியல்லாமல் இந்த சிக்கலில் அகப்பட்டவர்களை மீட்டெடுத்து, அவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுப்பது, அதற்கு வழியில்லா விட்டால் சொந்த செலவில் தாய்நாட்டிற்கு அனுப்பி வைப்பது போன்ற செயல்களைச் செய்து வருகிறது துபாயில் இயங்கி வருகிற ஓர் அமைப்பு. அதன் பெயர் அமீரக நண்பன் குழு.
இருக்கட்டும். அவர்களைச் சற்று பிறகு பார்ப்போம். முதலில், துபாயில் வேலை என்று வருவோர் எப்படி எக்குத்தப்பாக மாட்டிக் கொள்கிறார்கள்?
‘துபாயில் பெரிய குளு குளு மாலில் வேலை. ஆயிரத்து இருநூறு திர்ஹாம் சம்பளம். உணவு, தங்குமிடம் எல்லாம் உண்டு. அங்கே போய் இறங்கினா எல்லாம் நம்ம ஆளுகதான்’ என்று கலர் கலராக விளம்பரம் செய்து கூப்பிடும் ஏஜண்டுகள் மூலம் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் தினசரி சுமார் இரண்டாயிரம் பேர் துபாய்க்கு வருகிறார்கள். அதில் அதிகபட்சம் ஐம்பது பேருக்கு மட்டும்தான் வேலை கிடைக்கிறது. வேலை கிடைத்தவர்களுக்கும் ஏஜன்ட் சொன்ன மாதிரி, ‘குளுகுளு ஏசி மால்’ எல்லாம் இல்லை. சம்பளமும் அவ்வளவு கிடையாது. 700 திர்ஹாம் கொடுப்பார்கள். அதன் இந்திய மதிப்பு பதினைந்தாயிரம்தான். ஒட்டகம் மேய்க்கும் வேலை என்று நகைச்சுவைக்குச் சொல்வார்களே, கிட்டத்தட்ட அதைப் போன்ற பணிகள்தாம் கிடைக்கும்.
வேலை கிடைக்காத ஆயிரமாயிரம் ஆண்-பெண்கள் துபாய், ஷார்ஜா, அஜ்மான் போன்ற இடங்களில் இருக்க இடம் இல்லாமல், உண்ண உணவு கிடைக்காமல் பூங்காக்களிலும், மால்களிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்…