குஜராத் மாநிலம், துவாரகா கடற்பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் நீருக்கடியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆழ்கடல் அகழாழ்வு மையம் (Underwater Archaeology Wing) எண்பதுகளில் இருந்தே இந்தப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இப்போது சமீபத்தில் இதற்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு, ஆய்வுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. நீருக்கடியில் புதைந்திருக்கும் வளமான பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்று அரசு தெரிவிக்கிறது. துவாரகா உண்மையில் கடலில் மூழ்கியதா? அது மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணர் ஆட்சி புரிந்த பகுதிதானா? இதுவரை அங்கு என்னென்ன கண்டுபிடிக்கப்படுகின்றன? ஏன் இத்தனை செலவு செய்யப்படுகிறது? அறிவியல் என்ன சொல்கிறது?
துவாரகா அல்லது துவாரகை என்ற பெயருக்கு சமஸ்கிருதத்தில் “வாசல்” என்று பொருள். இன்னும் நுண்மையாகப் பொருள் கொண்டால் “சொர்க்க வாசல்”. அது கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த நிலப்பகுதி என்று புராணங்கள் கூறுகின்றன. கிருஷ்ணர் உலகை விட்டுச் சென்றபோது துவாரகா கடலில் மூழ்கியது. அதுவே கலியுகத்தின் தொடக்கம் என்பது நம்பிக்கை. அது புராண நம்பிக்கையாக மட்டுமே இருந்தது.
1963இல் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் பழங்கால துவாரகாவின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அன்றிலிருந்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கட்டட அடித்தளங்கள், கல் தூண்கள், கல் நங்கூரங்கள் மற்றும் பாசனக் கால்வாய்கள் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்துள்ளனர்.
Add Comment