பால்முகம் மாறா, சிரித்த முகம் கொண்ட கிலியெப் (8 வயது). சுருட்டை முடியுடன் சற்றே வளர்ந்த எவோர் (10 வயது). இருவருக்கும் கிடைத்த பொறுப்பான அண்ணன் டிமஃபி (11 வயது). மூவருக்கும் ஓயாமல் சண்டை, கைபேசிக்காக. பப்ஜி விளையாட அல்ல, படிப்பதற்கு. போரின் உபயத்தால் பள்ளிப் பாடங்கள் அனைத்தும் இதன் மூலமே. சண்டையும், வீட்டுப் பாடங்களும், அவ்வப்போது முற்றத்து நாயுடன் விளையாட்டும்தான் இவர்களின் பொழுதுபோக்கு. இன்னொன்றும் உண்டு.
தாக்குதலை எச்சரிக்கும் சைரன் சத்தம். கேட்டவுடன் கடைக்குட்டி கிலியெப், பயத்தில் இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொள்வான். எவோரும், டிமஃபியும் அவனை விளையாட்டில் திசைதிருப்ப முயல்வார்கள். விமானம் பறந்துவரும் சத்தம் கேட்கும். அதன் அருகாமையை வைத்து குண்டு விழப்போகும் இடத்தை யூகித்து விடுவர் இருவரும். பழக்கத்தில் கற்றுக்கொண்டது தான். பின்பு பட்டாசு வெடிப்பதைப் போலவோ, இடி விழுவதைப் போலவோ அவர்களின் பிராப்தத்தைப் பொறுத்து சத்தம் கேட்கும். இது ஆரம்பிக்குமுன், மூவரும் கை கோர்த்துப் பதுங்குவர். விளக்கை அணைத்து, தரையில் குப்புறப்படுத்து, கம்பளிகளைத் தங்கள் மேல் போர்த்திக் கொள்வார்கள். முடிந்துவிட்டது என்று மூவருக்கும் எப்போது தோன்றுகிறதோ, அப்போது மற்ற பொழுதுபோக்குகளுக்குத் திரும்புவர்.
கொரோனாவில் இரண்டு வருட வாழ்க்கை ஸ்தம்பித்தது. அடுத்து வந்தது போர். போரில் அழிந்தவை இராணுவத் தளவாடங்களும், வீடுகளும் மட்டுமல்ல. பள்ளிகளும், கல்லூரிகளும்கூடத்தான். தகர்ந்தவை உக்ரைனியக் குழந்தைகளின் பள்ளிப்பருவமும், எதிர்காலக் கனவுகளும் தான். நூறு, ஆயிரம் என்றல்ல, ஐந்து மில்லியன் கனவுகள் தொலைந்த கதை இது.
Add Comment