பலகோடி ரூபாய் முதலீடு செய்யப் போகிறோமே, படாத பாடுபட்டு தேர்தலில் நிற்பதற்கு சீட் வாங்கப்போகிறோமே, ஏப்ரல் மாதத்து வெயிலைப் பொருட்படுத்தாமல் வீதி வீதியாய் அலைந்து, பார்ப்பவர்களின் காலில் எல்லாம் விழுந்து கும்பிட்டு ஓட்டுக்கேட்டு, ஒரு முப்பதுநாட்கள் இராத்திரி, பகல் வித்தியாசம் இல்லாமல், பேய் போல வேலை செய்யப்போகிறோமே, ஒருவேளை, வெற்றி கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது…? செய்வதுதான் செய்கிறோம், எல்லாவற்றையும் கொஞ்சம் நாள், நட்சத்திரம் பார்த்துச் செய்தால்தான் என்ன என்ற எண்ணமும், பயமும் வருகிறதல்லவா..? அந்த இடத்தில்தான் சென்டிமெண்ட் என்கிற ஹீரோ, தேர்தல் என்னும் திரைப்படத்தில் என்ட்ரி ஆகிறார்.
அதன்பின்பு, ஒரு பிள்ளையார்சுழி போடுவது என்றாலும், சென்டிமெண்ட் பார்த்துத்தான் போடுவது என்ற நிலைமைக்கு அவர்கள் ஆளாகி விடுகிறார்கள். வேட்பாளர் விருப்ப மனுவில் துவங்கி வாக்கு எண்ணிக்கைக்குத் தயாராகும் வரை தேர்தல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்விலும், சென்டிமெண்ட்தான், அங்கிங்கெனாதபடி, எல்லா இடங்களிலும் அந்தர்யாமியாய், நீக்கமற நிறைந்து விடுகிறது. ‘சூது கவ்வும்’ திரைப்படத்தில், விஜய்சேதுபதியின் கண்களுக்கு மட்டும் விஷுவலாகத் தெரியும் அவரின் காதலி, அவரின் ஒவ்வொரு செயலையும் முத்தம் கொடுத்துப் பாராட்டி, அவரை லிஃப்ட் செய்துக்கொண்டே இருப்பாள். அதுபோல, வேட்பாளராய் ஆன நாள் முதல், ரிசல்ட் வரும் இறுதி நிமிடம் வரை, ஒவ்வொரு வேட்பாளருக்கும், அவர்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும் சென்டிமெண்ட் காதலி, ‘மாமா, நீ ஜெயிச்சிடுவே, வெற்றி உனக்குத்தான்’ என்கிற, ஒரு இனம்புரியாத நம்பிக்கையை, அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டே இருக்கிறாள்.
Add Comment