அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் புறப்பட்டால் மட்டுமே கொழும்புக்குப் போகும் வேனில் இடம் கிடைக்கும். பாப்பாவுடன் தாயோ தந்தையோ, யாராவது ஒருவர் போகலாம். வவுனியாவிலிருந்து பயணம் தொடங்கி பல மணி நேரங்கள் கடந்து கொழும்பு புற்றுநோய் வைத்தியசாலையை அடைவதற்குள் குழந்தை சோர்ந்தே போய்விடும். ஒரு பயணத்திற்கான கட்டணம் பத்தாயிரம் ரூபாய். எங்கேயாவது கடனை வாங்கிப் போய் சேர்ந்தால் அங்கே சில்லறைச் செலவுகள் பல காத்திருக்கும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை போயே ஆக வேண்டும். சிகிச்சையின் முக்கியமான பகுதி இது. அரசாங்க மருத்துவமனையின் இலவச சேவையைக் கூட இத்தனை செலவுகளுக்குப் பின்னர்தான் பெறுகின்றனர் வடமாகாணத்தினர்.
இலங்கையின் வடமாகாணத்தில் மொத்தம் ஐந்து மாவட்டங்கள். யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார் நாட்டின் ஐந்து வீதமான மக்கள் இங்கே வாழ்கிறார்கள். தலைநகருக்குச் செல்வதென்பது இந்தியாவுக்குப் போவதைவிட செலவு மிகுந்த பயணம் அவர்களுக்கு. தவிர்க்கவே முடியாத நிலைமைகளில் மாத்திரமே போவதற்கு எத்தனிப்பார்கள்.
Add Comment