28. வென்ற கதை
ஒரு கல்லூரிச் செயல்திட்டமாகத் தொடங்கப்பட்டது. தன் முதல் அலுவலகத்தை கார் கேரேஜில் தொடங்கியது. இரண்டு மாணவர்களின் விளையாட்டுச் செய்கை என்று வர்ணிக்கப்பட்டது. ஏகப்பட்ட எதிர்ப்புகளைக் கண்டது. ஆனாலும் திடமாக, தீர்க்கமாகத் தனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக்கொண்டு வலுவாக வளர்ந்தது. இன்று உலகை ஆள்கிறது. நீ இன்றி நாங்களில்லை என்று உலக மாந்தர்களால் புகழப்படுகிறது. கூகுளின் இந்தத் தனித்துவமான வெற்றியும், உயரமும் எப்படிச் சாத்தியமாயிற்று?
செம்மை செய்:
கூகுள் வளர்ந்த கதையையும், அதன் நீண்ட நெடிய செயலிகள் வரிசையையும் விரிவாகப் பார்த்தோம். இவை எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்பது அதன் பயனர் அனுபவ நோக்குதான் (User Experience). பயன்படுத்துகிறவனுக்கு நம் செயலி எளிமையானதாகவும், திரும்பத் திரும்ப உபயோகிக்கவல்லதாகவும், உருவாக்கும் எல்லாவற்றிலும் ஏதேனும் புதுமை கலந்தும், காலத்துக்கேற்ற மாற்றங்களை உள்வாங்கும் தன்மையானதாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் கூகுளின் தாரக மந்திரம். இதில்தான் அதன் ஆதார வெற்றி ரகசியம் இருக்கிறது.
செயலியின் பயன் மதிப்பு, பயனரின் பயன்பாட்டுத் தேவைகளுக்கேற்பத் தன்னை மாற்றி எளிமைப் படுத்திக்கொள்வது என்ற இந்த இரண்டு விஷயங்கள் இல்லாத கூகுள் தயாரிப்புகளே இல்லை. கூகுள் தேடுபொறியின் அந்த எளிய முதற்பக்கமே இதற்கு சாட்சி. வண்ண விளம்பரப் பதாகைகளோடு இணைய போர்ட்டல்கள் உருவான நாளிலேயே கூகுள் பக்கம் எளிமையான வெண்ணிறப் பின்னணியில்தான் இருக்கும். ஒரே ஒரு தேடு பொருளை உள்வாங்கும் சிறிய பெட்டி மட்டும்தான் ஆதாரமாக இருக்கும் என்று ஒரு முடிவெடுத்தனர். இன்று வரை அதை மாற்றவில்லை. வளர்ந்து வந்திருக்கும் தொழில் நுட்ப மாற்றங்களில் அந்தப் பக்கத்தை என்னென்னவோ செய்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. என்ன இருந்ததோ இன்றும் அது அப்படியே தொடர்கிறது ஆங்காங்கே சிறிய சிறிய ஐகான்கள் பின்னாள்களில் வந்ததே ஒழிய அந்த ஆதார நோக்கிலிருந்து சற்றும் விலகாது எளிமைதான் பலம் என்று பயனர் அனுபவத்தை மட்டுமே வழங்கி வருகிறது.
Add Comment