நூற்று மூன்று வருடங்களாக ஒரு பதிப்பகம் ஆன்மிகப் புத்தகங்களை மட்டும் வெளியிட்டு வருகிறது. பெரும்பாலான இந்திய மொழிகளில் அவை உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டும் கிடைக்கிறது. எதுவும் எளிமை, எல்லாம் எளிமை என்பதே அந்தப் பதிப்பு நிறுவனத்தின் தாரக மந்திரம். சாதாரண மக்களுக்கு உயர்ந்த ஆன்மிக விஷயங்களை எளிமையாகப் புரிய வைப்பதையே தனது வாழ்நாள் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும், அந்தப் பதிப்பகம், கீதா ப்ரஸ்.
1923 ஆம் ஆண்டு, தொழிலதிபர் ஜெய்தயாள் கோயங்காவால் இது ஆரம்பிக்கப்பட்டது. மிகக்குறைந்த முதலீட்டில் ஒற்றை அச்சு இயந்திரத்தோடு உத்திரபிரதேச மாநிலம், கோரக்பூரில் நிறுவனத்தை அவர் தொடங்கினார். மிகப்பெரிய முதலீடோ, மாபெரும் தொழில்நுட்பமோ அந்தக்காலத்தில் அச்சுத்துறையில் சாத்தியமே இல்லை. அந்த சூழ்நிலையிலும் மலிவுவிலையில் தரமான முறையில் புத்தகங்களை அச்சிட்டு பொதுமக்களுக்குக் கொடுக்கவேண்டும், அது வருடக்கணக்கில் தொடர்ந்து நடக்கவேண்டும் என்று ஜெய்தயாள் கோயங்கா ஆசைப்பட்டார். பதிப்புத்துறையில் காலம் கடந்து நிலைத்து நிற்கவேண்டும் என்கிற கனவும், அதை நனவாக்கும் தொலை நோக்குத்திட்டமும் ஜெய்தயாள் கோயங்காவிடம் இருந்தது. அவர் வகுத்துக்கொடுத்த செயல்திட்டம், பத்திரிகை ஆசிரியர்கள், குறைந்த பணியாளர்கள். இதுதான் கீதாபிரஸ்ஸின் அஸ்திவாரம்.
ஆரம்பக்காலத்தில் 40 பைசாவுக்கு பகவத்கீதை புத்தகமும், பத்துபைசாவுக்கும் குறைவான விலையில் ஹனுமன் சாலிசா புத்தகமும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விலை மலிவு என்றாலும் தரமான காகிதத்தில் உயர்தரத்தில் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. எந்தவிதமான சமரசமும் இன்றி விலை மலிவு, சிறந்த தரம் – நிரந்தரம் என்கிற கொள்கையில் இருந்து சற்றும் விலகாது தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார்கள்.
காலப்போக்கில் தொண்டுள்ளம் கொண்ட தன்னார்வலர்கள், அச்சுத்துறையின் நவீன தொழில்நுட்பங்கள், பதிப்புத்துறைசார்ந்த சிறந்த மேலாண்மை உத்திகள், புத்தகங்களை மக்களிடம் கொண்டுச்சோ்ப்பதில் அவர்கள் அமைத்த பரந்த நெட்ஒர்க் ஆகியவை ஒன்றாக கைக்கோத்துக்கொள்ள தற்போது நூறாண்டுகளைத் தாண்டியும் பதிப்புத்துறை எனும் களத்தில் நாட்அவுட் பிளேயராக கீதாபிரஸ் அடித்து ஆடிக்கொண்டிருக்கிறது. இந்தி மற்றும் இதர வடமாநில மொழிகள் பேசும் ஒவ்வொருவரின் வீட்டிலும் கீதா பிரஸ் பதிப்பகத்தின் ஏதேனும் ஒருபுத்தகம் கட்டாயம் இருக்கும்.















Add Comment