இந்திய வரைபடத்தின் தலைப்பகுதி பிராந்தியத்தை நாம் மொத்தமாக காஷ்மீர் என்று அழைக்கிறோம். உண்மையில் அது மூன்றாகப் பிரிந்திருக்கிறது. பக்கவாட்டுக் கோடெடுத்துத் தூக்கிவாரிய தலைப்பகுதி போலிருக்கும் உச்சிப் பகுதியில், இடது பக்கம் இருக்கும் லடாக்கில் ஒரு பகுதியை 1962 முதல் ஆக்கிரமித்து அக்சை சின் என்றழைக்கிறது சீனா. வலது பக்கம் இருக்கும் கில்கிட், அதற்குக்கீழே காது போன்ற தோற்றத்தில் இருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இரண்டுமே பாகிஸ்தான் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நடுவில் முகம் மாதிரி இருக்கும் பகுதி மட்டுமே ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளாக இந்தியா கட்டுப்பாட்டில் இருக்கிறது.
கில்கிட், அக்சை சின், லடாக் பகுதிகள் மூன்றும் சந்திக்கும் இடத்தில் உள்ள முக்கோணப் பகுதியான சியாச்சின் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த உயரமான பகுதி என்பதால் இதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா ஏகப்பட்ட செலவுகளைச் செய்ய வேண்டியதிருக்கிறது.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் நிலப்பரப்பினை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று வரையறுக்கிறது இந்தியா. POK – Pakistan Occupied Kashmir. சர்வதேசச் சமூகம் Pakistan Administered Kashmir PAK என்கிறது. இது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தாலும் நிர்வாகம் செய்யும் முறை முற்றிலும் வெவ்வேறானது. இப்பகுதியில் பிரிட்டிஷ் காலத்தில் அரசியல் நடவடிக்கைகளைத் தடுக்க இருந்த கறுப்புச் சட்டம் நெடுங்காலம் நடைமுறையில் இருந்தது. ஜுல்பிகர் அலி புட்டோ காலத்தில் இச்சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் குறைந்தளவு அரசியல் உரிமைகளே உள்ளன.















Add Comment