நூற்று இருபத்தேழு ஆண்டுகள் பழமையான கோத்ரெஜ் குழுமத்தில் முதல் முதலாக ஒரு பிரிவினை நடக்கிறது. கோத்ரெஜ் குழுமத்தைச் சேர்ந்த ஆதி கோத்ரெஜ் மற்றும் அவரது சகோதரர் நாதிர் இருவரும் கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தம் வசம் வைத்துக் கொண்டு, உறவினர்களுடன் சேர்ந்து கூட்டமைப்பைப் பிரிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். பட்டியலிடப்படாத (Unlisted Company) கோத்ரெஜ் & பாய்ஸ் (Godrej & Boyce) மற்றும் அதன் துணை நிறுவனங்களையும், மும்பையில் உள்ள பிரதானச் சொத்துகளையும் குடும்ப உறுப்பினர்கள் ஜம்ஷித் மற்றும் ஸ்மிதா ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கிறார்கள்.
கோத்ரெஜ் குடும்பம் சொத்துகளைப் பிரித்துக் கொள்வது பற்றி ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்தே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தக் குடும்பத்தினர் எந்தக் குடும்பச் சண்டை, சொத்துத் தகராறுகளும் இல்லாமல் சுமுகமாக நிறுவனத்தைப் பிரித்துக் கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
டாடா குழுமம் போன்றொரு பழைமையான நிறுவனம் கோத்ரெஜ். சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைச் சமூகத்திற்குக் கொடுக்க வேண்டும் என்ற டாடா குழுமத்தின் நோக்கம் கோத்ரெஜ் குழுமத்திற்கும் உள்ளது. இந்நிறுவனம் ஒவ்வொரு துறையிலும் கால் பதித்ததும் அந்தத் துறைகளில் வேரூன்றி வளர்ந்ததும் சுவாரஸ்யமான வரலாறு.
Add Comment