மிகப்பெரிய கடைகளில் நகைகள் வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என்ற பெயரில் குறிப்பிட்ட தொகை நம்மிடம் வசூலிக்கப்படுகிறது. தங்கம் விற்கும் விலையில் இது கூடுதல் சுமையே. ஒருசில கடைகளில் இதுபற்றி பேரம் பேசமுடிவதில்லை. அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துவிட்டு வரவேண்டியதுதான். பேரம்பேச முடிகின்றக்கடைகளில் இதுபற்றி ஒரு வேண்டுகோள் வைக்கும் தொனியில் நயந்துதான் கேட்கவேண்டியுள்ளது. அதுகூட சிலசமயம் பலன்கொடுப்பதில்லை. உண்மையில் செய்கூலி, சேதாரம் என்பதெல்லாம் என்ன? அவற்றை எப்படிக்கணக்கிடுகிறார்கள்?
கடைகளில் ரெடிமேடாக தயார்நிலையில் இருக்கும் நகைகள் வாங்குவதற்கும், பாரம்பரியமாக நகைகள் செய்துகொடுப்பதை தொழிலாக செய்துவரும் ஆசாரிகளிடம், தங்கம் கொடுத்து நகைகள் செய்வதற்கும் என்னென்ன வித்தியாசம்? நமக்கு இதனால் நாலுகாசு மிச்சமாகுமா? இவற்றை அறிந்துகொள்ள நகை ஆசாரிகள் சிலரை அணுகினோம்.
தங்கநகை செய்யும் ஆசாரிகள்தானே, அவர்களுக்கென்னப்பா குறைச்சல். மகாலட்சுமிகடாக்ஷம் பெற்றவர்கள். செழிப்பானதொரு நிலையில் இருப்பார்கள் என்ற எண்ணம் பலருக்கு இருக்கும். ஆனால், இன்றைய நிலவரம் வேறுமாதிரியாக உள்ளது. பாரம்பரியமாக நகைத்தொழில் செய்யும் ஆசாரிகளை சற்று சிரமப்பட்டு தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டியுள்ளது. பொருளாதார நிலைமையும் சிறப்பானதாக இல்லை. அதாவது தங்கம் விற்கும் விலை, நகைக்கடைஉரிமையாளர்கள் நிலை, இவற்றோடு ஒப்பிடும்போது ஆசாரிகளின் நிலை எங்கோ வெகுதொலைவில் நின்றுபோய்விட்டது என்றே சொல்லலாம்.














Add Comment