ஹைதி நாட்டில் சட்டவிரோதக் கும்பல் தாக்குதலில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்து சுமார் 7000 பேர் தப்பித்து இடம் பெயர்ந்துள்ளனர். சட்ட ஒழுங்கை நிலைநாட்ட முடியாத இடைக்கால அரசாங்கம் சர்வதேச உதவிகளை எதிர்பார்க்கிறது.
வட அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் நடுவில் உள்ள கரீபியன் கடலில் உள்ள அழகிய நாடு ஹைத்தி. ஹைத்தியின் தலைநகரிலிருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாண்ட்-சொந்தே (pont-sonde) என்ற ஊரில் இத்தாக்குதல் நடந்தது.
இது, ஹைத்தியில் சமீப காலத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்திலும் மிகக் கொடூரமான படுகொலை என்று கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு, தீ வைப்பு சம்பவங்களால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது.
ஹைத்தியின் தலைநகரம் போர்ட்-ஆ-பிரின்ஸ். எண்பது சதவீதத் தலைநகரை ஆக்கிரமித்திருப்பது சமூக விரோதக் குழுக்கள் (gangstars). அதில் கிரான் கிரிஃப் (Gran Griff) எனப்படும் ஒரு குழு தான் பாண்ட்-சொந்தே கொடூரத்தை நிகழ்த்தியது. நூறு பேரைக் கொண்டிருக்கும் இந்தக் குழு இரண்டு மாதமாகவே தாங்கள் தாக்குவோம் என்று எச்சரித்திருந்தது.
இந்தக் குழுவின் தலைவர் லக்சன் எலான் கூறிய காரணம் “விஜிலன்ட் குழு எங்கள் குழுவை இரண்டு மாதத்திற்கு முன் கொன்றபோது, மக்கள் அதனை ஆதரித்தனர். மேலும், எங்கள் ரோடு கான்ட்ராக்ட் வழியாக நாங்கள் சம்பாதிக்கும் பணத்தை நிறுத்துவதற்குக் காரணமாய் இருந்தனர்” என்பதே.
Add Comment