ஹன்னிபல் கடாஃபி, லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி முவாம்மார் கடாஃபியின் எட்டு வாரிசுகளில் ஒருவர். கடந்த பத்து ஆண்டுகளாக லெபனான் சிறையில் விசாரணை ஏதுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருந்தார். லெபனான் அரசால் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சரி, ஹன்னிபல் கடாஃபியின் இந்தச் சிறைவாசம் எதற்காக?
இமாம் மூஸா அல்-சதர் என்பவர் ஒரு ஷியா இஸ்லாமிய மதகுரு. ஈரானில் பிறந்த இவர், லெபனானில் வாழ்ந்து வந்தார். 1978ஆம் ஆண்டு லிபியாவில் பயணம் செய்தபோது, தன் குழுவினருடன் மர்மமான முறையில் காணாமல் போனார். அவர்களது கதி என்னவானது என்பது இன்று வரை புரியாத புதிர். அன்றைக்கு லிபியாவை ஆட்சி செய்த கர்னல் முவாம்மார் கடாஃபிதான் இதற்குக் காரணம் என்பது லெபனானின் குற்றச்சாட்டு. அதைக் கடைசிவரை கடாஃபி மறுத்து வந்தார். ஆனால் லெபனான் அதை ஏற்கவில்லை. இச்சம்பவத்தால் இரு நாடுகளுக்குமிடையே உறவு கசந்து போனது.
2011ஆம் ஆண்டு கர்னல் கடாஃபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அவரும் கொல்லப்பட்டார். அவருடைய மகனான ஹன்னிபல் கடாஃபி அல்ஜீரியாவிலும், பின்பு சிரியாவிலும் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்தார். 2015ஆம் ஆண்டு, ஆயுதமேந்திய குழு ஒன்றால் அங்கிருந்து லெபனானுக்குக் கடத்தி வரப்பட்டு விடுவிக்கப்பட்டார். உடனே லெபனான் அரசு அவரைக் கைது செய்தது. இமாம் மூஸா பற்றிய தகவல்களை மறைத்ததாகக் குற்றஞ்சாட்டி ஹன்னிபல் கடாஃபியை சிறையில் தள்ளியது.














Add Comment