15. லெபனான் போர்
சிரியாவும் அசாத்தும் வேறல்ல என்ற நிலைக்கு வந்தாகிவிட்டது. அதிபராகியிருந்த இந்த மூன்று வருடங்களில் ராணுவத்தை நன்கு பலப்படுத்தியிருந்தார். சோவியத் உடனான நெருங்கிய நட்பு அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. சோவியத்திடம் இருந்து மிக்-21 வகை நவீனப் போர் விமானங்கள், டி-62 வகை பீரங்கிகள், ஏவுகணைகள் என அனைத்தையும் பெற்றிருந்தது சிரியா. ஐம்பதாயிரமாக இருந்த வீரர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பதாயிரமாக அதிகரிக்கப்பட்டிருந்தது.
இது மட்டும் அசாத்துக்குப் போதவில்லை. இஸ்ரேலிடம் இழந்த கோலன் குன்றுகளை மீண்டும் கைப்பற்ற வேண்டுமென நினைத்தார். ஆனால் தனியாக அதைச் சாதிக்க முடியாதென்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. நாசருக்குப் பின் எகிப்தின் அதிபராகியிருந்த அன்வர் சதாத்துக்குத் தூதுவிட்டார் அசாத்.
சிரியாவைப் போல, எகிப்தும் சினாய் பகுதிகளை இஸ்ரேலிடம் இழந்திருந்தது. அதை மீட்டெடுக்கும் சந்தர்ப்பத்துக்காக அன்வரும் காத்துக் கொண்டிருந்தார். அசாத்தின் அழைப்பை உடனடியாக ஏற்றுக் கொண்டார்.










Add Comment