எனக்கு அந்த விபரீத ஆசை வந்திருக்க வேண்டாம்தான். விடிந்து எழுந்தது முதல் தூங்கப் போகும் வரை சர்வ சதா காலமும் போர்த்தகவல்கள், அரசியல் செய்திகள், தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகள் என நாக்குத் தள்ள மென்னியை முறிக்கும் விஷயங்களையே கவனித்துக்கொண்டிருப்பவர் எங்கள் எடிட்டர். மெட்ராஸ் பேப்பரில் ஒரு மாறுதல் இருந்தால் பரவாயில்லை என்று அவருக்குத் தோன்றியிருக்கலாம். யாராச்சும் நல்ல நகைச்சுவைக் கட்டுரை எழுதுங்களேன் என்று எடிட்டோரியல் மீ்ட்டிங்கில் வாய்விட்டுக் கேட்டே விட்டார். அங்குதான் பிரச்சினை ஆரம்பம்.
படிக்கும் காலத்திலிருந்தே கொஞ்சம் கஷ்டமான விஷயங்களை யாருக்கும் தெரியாமல் சாய்சில் விட்டுவிடுவது என்னும் நல்ல பழக்கம் கொண்டிருந்தேன். அன்றைய மீட்டிங்கிலும் விஷயத்தினைக் கேட்டுவிட்டு வழக்கம்போல தேமே என்று சும்மா இருந்திருக்கலாம்தான். விதி யாரை விட்டது? நாமும் ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதித்தான் பார்க்கலாமே என்கிற ஆசை வந்துவிட்டது.
ஆனாலும், எழுத ஆரம்பிக்கும் வரையிலும் எடிட்டரின் சாந்தமான முகம் என் கண்முன்னே வந்துவந்து போய்க்கொண்டேதான் இருந்தது. நான் எழுதும் சேமியா உப்புமா கட்டுரைகளைப் (வித் தக்காளி சட்னி) படித்து பட்டி, டிங்கரிங் பார்த்து, பெயிண்ட் அடித்து மெட்ராஸ் பேப்பரில் போட்டுக்கொண்டுதான் இருக்கிறார். அந்த நன்றிகூட இல்லாமல், நகைச்சுவையாக எழுதுகிறேன் போ்வழி என்று அபத்தமாக எதையாவது எழுதி அதனைப் படித்துப் பார்க்கும் பெரிய தண்டனையை அவருக்குக் கொடுக்கத்தான் வேண்டுமா?















selvamani sir content super