முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டில் ஊருக்கொரு குஷ்பு ஒயின்ஸ் இருக்கும். வீதிக்கொரு பெண்ணின் பெயர் சரண்யாவாக இருக்கும். பத்துப் பெண்கள் நடந்து போகும்போது துணிந்து, ‘சரண்யா’ என்று குரல் கொடுக்கலாம். நிச்சயமாக ஒருத்தியாவது திரும்பிப் பார்ப்பாள். அந்த ஒருத்திகளுள் ஒருத்தியாக நானும் இருந்தேன்.
மனித வாழ்க்கையின் தீராச் சோகங்களுள் ஒன்று, எந்தப் பெற்றோரும் பிள்ளைகளைக் கேட்டுக்கொண்டு பெயர் வைப்பதில்லை என்பது. உறவுகள் பிறப்பது போல, உறுப்புகள் உதிப்பது போல நமது பெயர் நமக்கு அப்பாற்பட்ட சக்திகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுகிறது. சொல்லப் போனால், சில சமயங்களில் ஒருவர் பிறக்கும் முன்பே அவரது பெயர் பிறந்துவிடுகிறது. இந்த விதத்தில் பெரும்பாலானவர்களுக்குப் பெயரும் தலைவிதியும் ஒன்றே போலத்தான் இருக்கிறது.
ஆனால், நாம் விரும்பினால் பெயரை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அது ஒரு வசதி இருக்கத்தான் செய்கிறது என்றாலும் அப்படி மாற்றிக்கொள்ளும் காலம் வருவதற்குள் ஊர் உலகத்துக்கெல்லாம் நமது பெயர் கல்வெட்டாகிவிடுகிறது. ஒரு படத்தில் குஞ்சிதபாதம் என்ற தனது பெயரை மாற்ற சிவகார்த்திகேயன் படுகிற அவஸ்தைகளைப் பார்த்திருக்கிறேன். அந்தக் கொடுமைக்கு இந்தக் கொடுமை பரவாயில்லை என்று தோன்றும் அபாயமும் இருக்கவே செய்கிறது. தொழில்நுட்பம் வளரலாம். ஆனால், பிறக்கும் குழந்தையே அதன் பெயரைத் தீர்மானிக்கும் அளவு மனிதகுலம் வளரப்போவதில்லை.















Add Comment