சீனாவின் தியான்ஜின் நகரத்தில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சீனாவுக்குப் பயணம் செய்யப் போகிறார் என்ற செய்தி. சர்வதேச அரசியலரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. மோடி அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்வது இது முதல்முறையல்ல. ஆனால் இந்தக் குறிப்பிட்ட பயணச் செய்தி பெருமளவில் பேசப்படுவதற்கு சில அரசியல் காரணங்கள் இருக்கின்றன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்தோடு கடந்த 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பில் பெலாரூஸ், சீனா, இந்தியா, இரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய பத்து நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.
2020ஆம் ஆண்டு இந்திய-சீன எல்லையான லடாக்கில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் உண்டானது. கட்டைகள், இரும்புக் கம்பிகள், கற்கள் எனக் கையில் கிடைத்தவற்றை வைத்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் இந்திய வீரர்கள் இருபது பேரும், சீன வீரர்கள் நாற்பது பேரும் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகின. 2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில், இந்தியாவின் 2000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைச் சீனா ஆக்கிரமித்துவிட்டதாக மோடியின் அரசை ராகுல்காந்தி விமர்சித்திருந்தார். இந்த மோதல் நடந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மோடி மேற்கொள்ளவிருக்கும் இந்தச் சீனப் பயணம், இரு நாட்டு உறவுகளை இயல்பாக்குவதற்கான தொடக்கமாக இருக்கும்.















Add Comment