ரஷ்யப் படைகளுடன் சேர்ந்து போரிட்ட 22 வயது இந்திய மாணவர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் தங்களுக்கு வரவில்லை என்றும், செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் பணிகள் நடந்துவருவதாகவும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகத் தீவிரமாகத் தொடர்கிறது. உக்ரைனின் கிழக்குப் பிராந்தியத்தில் ரஷ்யா சில பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. அவ்வப்போது சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன, ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த முகாந்தரமும் தென்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, வடகிழக்கிலுள்ள தங்கள் நாட்டுப் படையினர், வெளிநாட்டுக் கூலிப்படையினருடனும் சண்டையிடுவதாகப் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தக் கூலிப்படையினர் சீனா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்படப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்.














Add Comment