உளவு பார்த்தல் என்பது மன்னர் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. புறாக்களில் தொடங்கி இப்போது தனியாக செயற்கைக்கோள் செலுத்திப் பார்க்குமளவுக்கு உளவின் வலு ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் தேவையான இன்னொரு நிர்வாக உத்தியாகத்தான் இருந்துவருகிறது. இது பெரும்பாலும் ரகசியமாகத்தான் நடக்கிறது என்றாலும், சில நேரங்களில் வெளிச்சத்துக்கு வரும்போது, பயின்ற அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகிவிட்டதே என்று அரசாங்கங்கள் கையைப் பிசையத்தான் வேண்டியிருக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு பெகாசஸ் என்னும் இஸ்ரேலிய நிறுவன ஸ்பைவேரை வைத்துக்கொண்டு பல நாடுகள் செல்ஃபோன்களை உளவு பார்ப்பதாகச் செய்தி வந்ததையும், பின்னர் மறுப்பு வந்ததையும், வழக்கு வந்ததையும், அது வழக்கம்போல அப்படியே மறக்கப்பட்டதையும் இப்போது கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நாம் நினைவுக்கு கொண்டுவந்துவிடலாம். அந்தக் கதையிலேயே அக்யூஸ்டாக நம் மத்திய பாஜக அரசை எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. எப்படியோ அந்தப் பூதத்தை நீதிமன்றக் குடுவைக்குள் அடைத்து வைத்து அடைகாத்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
Add Comment