இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் திருவிழாவின் 18ஆவது சீசன் தொடங்கிவிட்டது. உலகின் இரண்டாவது மிகப் பணக்கார விளையாட்டுப் போட்டி ஐபிஎல். கிரிக்கெட், இந்தியாவின் பிரதான மதமாக மாறிய 2000களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டது இது. முதலில் இந்தியாவுக்குள் மட்டும் பிரபலமான ஒரு கிளப் கிரிக்கெட் போட்டியாக இருந்த ஐபிஎல், இன்று 120 நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 2024இல் இந்தப் போட்டிகளை உலகெங்கும் மொத்தம் 107 கோடி பேர் கண்டுகளித்துள்ளனர்.
இந்த ஐபிஎல் போட்டிகளை நடத்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட, தன்னாட்சி அதிகாரமுள்ள ஒரு தனியார் நிறுவனம். எனவே இது மத்திய விளையாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதில்லை. ஆனாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது ‘இந்திய’ அணியை இந்த வாரியம்தான் களமிறக்குகிறது.
நூற்றைம்பது கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற மிகப் பெரிய மனிதவளம் மிக்க நாட்டில், கிரிக்கெட் என்னும் அந்நிய தேசத்து விளையாட்டைப் பிரபலப்படுத்தியதிலும், அதை ஒரு பணம் கொழிக்கும் வணிகமாக மாற்றியதிலும் பிசிசிஐக்கு மிகப் பெரிய பங்குண்டு. முதலில் சில விளையாட்டு வீரர்களால் டெல்லியில் தொடங்கப்பட்ட இந்த வாரியம், படிப்படியாக வர்த்தக முதலாளிகளாலும், பெரும் வளர்ச்சியடைந்த பின்னர் அரசியல்வாதிகளாலும் கையிலெடுக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பிசிசிஐயின் அதிகாரமிக்க உச்சப் பதவிகளில் சரத் பவார், அனுராக் தாக்கூர், அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா போன்றவர்கள் இருந்துள்ளனர்.
Add Comment