இரானில் கடந்த பதினேழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இரானின் நாணயமான ரியாலின் (Rial) மதிப்புச் சரிவு காரணமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது அந்நாட்டின் இஸ்லாமியக் குடியரசு ஆட்சியை அகற்றுவதற்கான உள்நாட்டுக் கலவரமாக உருவெடுத்துள்ளது. பாதுகாப்புப் படையினர் இணையச் சேவைகளை முடக்கியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் இப்போராட்டங்களை ஒடுக்க முயன்று வருவதால், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
1979ஆம் ஆண்டு புரட்சி நடந்து, இரான் தன்னை இஸ்லாமியக் குடியரசாக அறிவித்துக்கொண்ட அடுத்த மாதத்திலேயே ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் தெருவில் இறங்கிப் போராடினர். 1999ஆம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டங்கள், 2009ஆம் ஆண்டு நடந்த தேர்தல் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்கள், 2019ஆம் ஆண்டு நடந்த பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள், 2022ஆம் ஆண்டு பரபரப்பாகப் பேசப்பட்ட பெண் விடுதலைக்கான போராட்டங்கள் என மக்கள் போராடுவதும், அதை அரசு அடக்குமுறையால் ஒடுக்குவதும் இரானின் வரலாறு நெடுக நடந்துள்ளது.
இப்போது நடக்கும் போராட்டம் இதுவரை நடந்தவற்றிலேயே மிகப்பெரியதாகவும் வித்தியாசமானதாகவும் பார்க்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டின் இறுதியில் ரியாலின் மதிப்பு, வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு டாலருக்கு 1.48 மில்லியன் என்ற அளவில் சரிந்தது. இந்த நாணய மதிப்பிழப்பால் தங்களால் தொடர்ந்து வியாபாரம் செய்ய இயலாது எனக் கூறி, தெஹ்ரானின் மத்தியச் சந்தையில் உள்ள வர்த்தகர்கள் முதலில் போராட்டத்தைத் தொடங்கினர்.















Add Comment