கிட்டத்தட்ட வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும் ஜல்லிக்கட்டுக் காளையின் மனநிலையில் தான் ஈரான் இருந்திருக்கவேண்டும். சிரியா, ஈராக், பாகிஸ்தான் என அருகிலுள்ளவர்களைக் கடந்த வாரம் சகட்டுமேனிக்கு முட்டி தள்ளியிருக்கிறது.
பாகிஸ்தானின் பலோசிஸ்தான் பகுதியில் ஜனவரி 16-ஆம் தேதி ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. நடத்தியது ஈரான். தனக்கு எதிராகச் செயல்படும் சுன்னி இஸ்லாமிய ஜெய்ஷ் அல் அடல் அமைப்பைக் குறிவைத்தோம் என்பது ஈரானின் வாக்கு. அதெல்லாம் இல்லை… அவர்கள் கொன்றது இரு அப்பாவி குழந்தைகளை என்றது பாகிஸ்தான்.
ஜனவரி 18, 2024. மீண்டுமொரு வான்வழி தாக்குதல். இம்முறை தாக்கியது பாகிஸ்தான். பதில் தாக்குதலுக்காக அவர்கள் குறிவைத்தது, ஈரானின் சிஸ்தான்- பலோசிஸ்தான் பகுதியை. ‘மார்க் பார் சரமச்சர்’ என்ற பெயரில், போராளி அமைப்பான பலோசிஸ்தான் விடுதலை இயக்கத்தினரின் அமைவிடத்தைத் தாக்கியழித்தோம் என்றது பாகிஸ்தான். இல்லை மடிந்தது நான்கு குழந்தைகளும் மூன்று பெண்களும் தான் என்றது ஈரான்.
Add Comment