ஜப்பானின் பிரதமராக சனே டகைச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு வெறும் பத்து சதவீதப் பிரதிநிதித்துவம் மட்டுமே உள்ள ஜப்பானில், தலைமைப் பொறுப்பை ஒரு பெண் ஏற்றிருப்பது இதுவே முதல் முறை.
முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா முறைகேடு புகார்கள், கட்சிக்குள் அதிருப்தி உள்ளிட்ட காரணங்களுக்காகப் பதவி விலகினார். புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் சென்ற வாரம் நடைபெற்றது. அதில், 237 வாக்குகளுடன் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி) வேட்பாளர் சனே டகைச்சி வெற்றி பெற்றார். சில வாரங்களுக்கு முன்புதான் அக்கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
பண்டைய ஜப்பானின் தலைநகராக இருந்த நாரா பகுதியைச் சேர்ந்தவர் சனே டகைச்சி. அவரது தாய் காவல்துறையிலும், தந்தை வாகன உதிரிப் பாகத் தயாரிப்பு நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தனர். நாட்டின் புகழ் மிக்க பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெற்றிருந்தாலும், பெற்றோர்களால் அதிகம் செலவு செய்து இவரைப் படிக்க வைக்க முடியாத நிலை. இருப்பினும் டகைச்சி பெயர்பெற்ற கோப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, தனது படிப்புச் செலவுகளைச் சமாளித்துக் கொண்டார்.















Add Comment