ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா
ஆங்கிலத்தில்: வில்லியம் எல். கிராஸ்மன்
தமிழில்: ஆர். சிவகுமார்
கடமை உணர்வுமிக்க, ஒழுங்குநிறைந்த, நேர்மையான ஒருமனிதர் என் அப்பா. நம்பிக்கையான சிலரை விசாரித்ததில், இளம்பிராயத்திலேயே, இன்னும் சொல்லப்போனால் குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு இந்த குணங்கள் இருந்தது தெரியவந்தது. நமக்குத் தெரிந்த மற்ற ஆண்களைவிடவும் அதிகம் மகிழ்ச்சி உள்ளவராகவோ அதிகம் சோகம் நிரம்பியவராகவோ அவர் இருந்தது இல்லை என்பது என்னுடைய நினைவுக்கே புலனாகிறது. ஒருவேளை அவர் மற்றவர்களைவிடவும் சற்று அதிகம் அமைதியானவராக இருந்திருக்கலாம். எங்கள் வீட்டை ஆண்டது அம்மாதான், அப்பா இல்லை. என்னையும் என் சகோதரியையும் என் சகோதரனையும் அம்மா தினமும் திட்டினாள். ஒருநாள் அப்பா ஒரு படகுக்கு ஆர்டர் கொடுத்தார். அப்பா அதுகுறித்து மிகவும் தீவிரமான அக்கறையோடு இருந்தார். அந்தப் படகு பிரத்தியேகமாக அவருக்கு மட்டும் துவரை இனத்தைச் சேர்ந்த ஒரு மரத்தின் கட்டைகளால் செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தார். இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்குத் தாங்கக் கூடிய அளவுக்கு உறுதியாகவும் ஒரு ஆளுக்கான இடவசதி உடையதாகவும் அது இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். அம்மா அதுபற்றி மிகவும் புலம்பிக் கொண்டேயிருந்தாள். திடீரென்று அவளுடைய கணவன் மீனவனாகப்போகிறானா? அல்லது ஒரு வேட்டைக்காரனாக? அப்பா எதுவும் சொல்லவில்லை. எங்கள் வீடு நதியிலிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்திலேயே இருந்தது. அந்த நதி ஆழமானது; அமைதியானது; நதியின் அந்தக் கரையைப் பார்க்க முடியாத அளவுக்கு அகலமாகவும் இருந்தது.
Add Comment