காஷ்மீரில், மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி 49 இடங்களை கைபற்றி ஆட்சி அமைத்துள்ளது. ஓமர் அப்துல்லா முதல் அமைச்சர். காஷ்மீரில் பத்து வருட இடைவெளிக்குப் பிறகான தேர்தல் இது. அதுவும் 2019 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 360 ரத்து செய்யப்பட்டு, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லாடக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அவை அறிவிக்கப்பட்ட பின்பு அங்கு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. கடந்த செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 1 வரை, மூன்று கட்டங்களாக நடந்தது.
தேர்தல் அறிவிப்புகள், பிரச்சாரம், ஓட்டுப் பதிவு, வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள் அதன் பிறகான ஆட்சி அமைப்பு என அனைத்தும் நன்றாகவே நடந்திருக்கின்றன. ஆனால் அதோடு சுபம் போட்டு விடுகின்ற விஷயமல்ல காஷ்மீர். தேர்தல் முடிவுகள் எவ்வாறு மக்களின் மனத்தைப் பிரதிபலித்திருக்கின்றன? மீண்டும் அங்கு சிறப்பு அந்தஸ்தைக் கொண்டு வருவோம், மாநிலமாக்குவோம் என அனைத்துத் தரப்பு கட்சிகளுமே வாக்குறுதியாகக் கொடுத்தவற்றை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார்கள்?
90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 870 பேர் வேட்பாளர்களாகக் களம் இறங்கினார்கள். மொத்த ஓட்டுப் பதிவு 66% . ஸ்ரீநகரில் மட்டும் எப்போதும் போலக் குறைந்த அளவிலேயே வாக்குப்பதிவு நடந்தது (29%), கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட ஐந்து சதவிகிதம் அதிகம் என்றாலும், அங்கு எப்போதுமே மக்கள் தேர்தல்களைப் புறக்கணிக்கத் தான் செய்கிறார்கள். இந்த வாக்குப்பதிவுகள், புதிய ஆட்சி என எதுவும் எங்களுக்குப் பலன் இல்லை என்பது தான் அவர்களின் வாதம். வாக்குப்பதிவு நாளில் மைதானங்களில் கிரிக்கெட் விளையாடுவதும், வீட்டிலேயே இருப்பதும் தான் அரசியல் கட்சி – அரசாங்கம் இவற்றின் மீதான இவர்களின் அதிருப்தியின் வெளிப்பாடு.
Add Comment