சரக்குக் கப்பலில் மின்சாரம் நின்று தடுமாறிய செய்தி வந்த மறுகணமே, “கீ பிரிட்ஜில் (key bridge) செல்ல யாரையும் அனுமதிக்காதீர்கள்” என்று இரவையும் கிழித்துக்கொண்டு வந்த அந்த அதிகாரக் குரலால் மேம்பாலத்தின் இரு பக்கமும் வாகனங்கள் தடுக்கப்பட்டன. இதனால் பல உயிர்ச் சேதங்கள் தடுக்கப்பட்டன. நள்ளிரவிலும் பொறுப்பாகக் கடமையைச் செய்த அதிகாரிகளையும் கடைசி நிமிடத்தில் விபத்தைத் தடுக்க முயன்றவர்களையும் பாராட்ட வேண்டும்.
95000 டன் எடையுள்ள இராட்சசச் சரக்குக் கப்பல், எவ்வளவுதான் மின்னாக்கிகளால் (generator) சக்தியூட்டி இடது பக்கம் திருப்ப முயன்ற போதும் முடியாமல் கண் இமைக்கும் நேரத்தில் வலது பக்கம் திரும்பி அந்தப் பழமையான, ஆனால் முக்கியமான மேம்பாலத்தில் இடித்துவிட்டது.
ஒரு நாளைக்கு 40 ஆயிரத்துக்கும் மேலான வாகனங்களைத் தாங்கி போக்குவரத்திற்கும் வாகனங்களின் முக்கியச் சந்தைக்கும் காரணமான மேம்பாலம் இடிந்து நொறுங்கியது, அந்த மேம்பாலத்தை, அந்த நள்ளிரவிலும் சீர்படுத்திக் கொண்டிருந்த ஆறு தொழிலாளிகளின் கனவைப் போலவே.
Add Comment