மனிதர்களுக்கு ஏற்படும் வயது மூப்பினைத் துரிதப்படுத்தவும் மற்றும் வயது மூப்பினால் ஏற்படும் சில நோய்களுக்கும் காரணமான 12 காரணிகளைப் பற்றிக் கடந்தசில அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்து வருகிறோம். இந்தக் காரணிகளில் கடைசி மூன்றினைப் பற்றித்தான் இந்த அத்தியாயத்தில் பேச இருக்கிறோம்.
செல்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றங்கள் (Intercellular Communication)
செல்கள் தமக்கு உள்ளாக மட்டுமல்லாமல் பல்வேறு உறுப்புகளில் உள்ள செல்களுடனும் சேர்ந்து இயங்கினால் மட்டுமே நமது உடலும் அதன் செயல்களும் முழுமை பெறும். இத்தகைய செல்களுக்கிடையேயான பொருள் மற்றும் உணர்வுப் பரிமாற்றங்கள் பல்வேறு முறைகளில் நடைபெறுகின்றன. இத்தகைய பரிமாற்றங்களுக்கு முக்கியப் பங்கு வகிப்பவை இரத்த ஓட்ட மண்டலம் (Circulatory system), நரம்பு மண்டலம் (Nervous system) மற்றும் நாளமில்லாச் சுரப்பிகள் மண்டலம் (Endocrine system) ஆகும். இவற்றுள் இரத்தத்தின் பங்கு பற்றி மட்டும் இங்கு பார்ப்போம். இரத்தத்தில் பல்வேறு கரையக்கூடிய கூறுகள் (Soluble components) உள்ளன. இந்தக் கூறுகள் நமது வயதிற்குத் தகுந்தாற்போல் மாறிக் கொண்டே இருக்கும். அதாவது வயதான ஒருவரின் இரத்தத்தில் உள்ள கூறுகள் இளம் வயதுடைய ஒருவரின் கூறுகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கும்.
இதில் உள்ள ஒரு சுவராசியமான விஷயம் என்னவென்றால் இந்தக் கூறுகளுக்கு வயது மூப்பினைக் கடத்தும் தன்மை இருப்பது. அதனைப் போல வயது மூப்பினைத் தாமதப்படுத்தும் தன்மையும் இவற்றிற்கு உண்டு. விலங்குகளிடத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள் இதனை உறுதி செய்திருக்கின்றன. உதாரணமாக, வயது முதிர்ந்த ஒரு விலங்கிடமிருந்து பெறப்பட்ட இரத்தத்தினை ஓர் இளம் வயது விலங்கிற்குச் செலுத்தும்பொழுது அந்த இளம் விலங்கின் உடலில் வயது மூப்பிற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கின்றது. நேர்மாறாக ஒரு வயதான விலங்கின் இரத்தத்தினை உப்புக் கரைசல் (Saline buffer) கொண்டு நீர்க்கச் செய்யும்பொழுது அதன் செல்களில் இளம் வயதினரின் செல்களில் உள்ள அடையாளங்கள் தெரிய வருகின்றன. இந்த ஆய்வு முடிவுகள் நமது இரத்தத்தில் வயது மூப்பிற்கான கூறுகள் இருப்பதை உறுதி செய்கின்றன. பீடா 2 மைக்ரோக்லோபுலின், ஐஎல்-6, டிஜிஎஃப்-பீடா போன்றவை இந்தக் கூறுகளில் அடங்கும். இந்தக் காரணிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் வயது மூப்பினைத் தள்ளிப்போட முடியும்.
Add Comment