6. அன்புள்ள அப்பா
ஒரு நாள் ஆனந்த பவனில் இரவு விருந்துக்குப் பல முக்கியப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது நடந்த ஒரு சம்பவம் மோதிலாலின் பிரசித்தி பெற்ற கோபத்துக்கு ஓர் உதாரணம்.
ஆனந்த பவனில், ஹரி என்று ஒரு வேலைக்காரர். மோதிலால் நேரு சம்பந்தமான எல்லா வேலைகளையும் அவர்தான் செய்வார். விருந்தினர்கள் டின்னர் சாப்பிடத் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், எல்லாம் தயாரா என்று பார்ப்பதற்கு அங்கே வந்தார் மோதிலால் நேரு. அந்த சாப்பாட்டு ஹாலின் ஒரு பக்கத்தில் வேலைக்காரர் ஹரி, விருந்தினர்களுக்குகான சாப்பாட்டுத் தட்டுகளைத் தன் மேல் துண்டால் துடைத்து வைத்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் மோதிலாலுக்கு சுருக்கென்று கோபம் வந்துவிட்டது.
“என்ன ஒரு அநாகரிகமான காரியம் செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கத்திக்கொண்டே ஹரியைப் போட்டு சாத்த ஆரம்பித்தார். வலி தாங்க முடியாமல் ஹரி அலறியபடி அங்கிருந்து ஓடுவதைப் பார்த்த விருந்தினர்கள் திகைத்துப் போனார்கள். மோதிலாலும் மூடு அப்செட் ஆகி ஒரு ஓரமாக உட்கார்ந்துவிட்டார். விருந்தினர்கள் ஒவ்வொருவராக சாப்பிடாமலேயே புறப்பட்டனர். முன்ஷி முபாரக் அலி என்ற இன்னொரு ஊழியர் மெதுவாக மோதிலால் நேருவிடம் சென்று அமைதியாகப் பேசி, அவரை சமாதானப்படுத்திய பிறகே, வீட்டில் சகஜ நிலை திரும்பியது.
Add Comment