யூனியன் பிரதேசமாக இருக்கும் லடாக்குக்கு மாநில அந்தஸ்தும், மக்களுக்கு வேலைவாய்ப்பு, நில உரிமைகளை ஏற்படுத்தித் தரக் கோரியும் ஆறு வருடங்களாகவே அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இதை வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் பத்தாம் தேதி உண்ணாவிரதமாகத் தொடங்கிய போராட்டம் சில தினங்களுக்கு முன் கலவரமாக மாறியது. போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் நடந்த சண்டையில் உயிர்ப் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன.
இதனையடுத்து லடாக்கில் இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்கள் திரளாகக் கூட தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. செப்டம்பர் 29ஆம் தேதி வரை அங்கே பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னின்று நடத்திய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
‘நிலைமை கைமீறிப் போனதால் என்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்கிறேன். மக்கள் உடனே இந்த வன்முறையை விடுத்து அறவழிப் போராட்டத்திற்குத் திரும்புங்கள்’ எனச் செய்தி சேனல்களிடம் கடந்த புதன்கிழமை பேசினார் கல்வியாளரும், சூழியலாளருமான வாங்சுக். ஆனால் பின்னணியில் கேட்டுக்கொண்டிருந்த அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களும், துப்பாக்கிக் குண்டுகளின் சத்தமும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளால் உண்டான புகை மண்டலங்களும் நிலைமையின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகின்றன.














Add Comment