இராஜராஜ சோழனின் வம்சத்தில் வந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் மிகவும் வருத்தத்தில் இருந்தான். காரணமற்ற சஞ்சலமும் விரக்தியும் அவனை ஆட்கொண்டிருந்தது. வருத்தத்திற்கு இரண்டு காரணங்கள். ஒன்று வம்சவிருத்திக்கென்று ஒரு வாரிசு இல்லாதது. இன்னொன்று என்னவென்று தெரியாத பிரம்மஹத்தி தோஷம் அவனை ஆட்கொண்டுள்ளது என்று சான்றோர் அவனிடம் சொல்லியிருந்தது. ஒன்றுக்கொன்று தொடர்புண்டா என்பது தெரியாமல் பரிகாரம் தேடி அலைந்து கொண்டிருந்தான். அப்பொழுதுதான் ‘சிவாலயங்கள் எழுப்பவும். அதுவும் ஒரு ஆற்றங்கரையில் அமைந்தால் மிகச் சிறந்த பரிகாரமாக அது அமையும்’ என்று அருள் வாக்கொன்று வந்தது.
‘கிடைத்தது சாபல்யம்’ என்று அவன் சிவாலயம் கட்டத் தோதான இடங்களைத் தேட ஆரம்பித்தான். திருச்சி அருகே உள்ள ஓர் ஊரில் உய்யகொண்டான் வாய்க்காலின் தலைப்பகுதியில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆறுகளிடமிருந்து வெட்டப்படும் வாய்க்கால்கள் வெட்டு வாய்த்தலை என்றும் அழைக்கப்பட்டன. அந்த ஊரில் வணிகர்கள் கூடும் இடமும் இதுதான். அந்த இடத்தைப் பேட்டை என்று அழைத்தனர். இரண்டும் இணைந்த இந்த ஊர் ‘பெட்டவாய்த்தலை’ என்று பெயர் பெற்றது.
அந்த ஊரில் ஆலயம் அமைத்தால் அமைதி நிச்சயம் என்று உணர்ந்தான் குலோத்துங்க சோழன். திருத்தலை மருதூர், திருவிடை மருதூர், திருக்கடை மருதூர் என்ற ஊர்களில் கட்டப்பட்ட சிவாலயங்கள் மிகப் பிரசித்தம். திருவிடை மருதூர் மத்யார்ஜுனேஸ்வரர் போலவே இந்த ஊரிலும் சிவனுக்கு நாமகரணம் சூட்ட முடிவாயிற்று. அப்படி எழுந்ததுதான் பெட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் திருத்தலம். தாயாரின் பெயர் பாலாம்பிகை.
Add Comment