சூரிய உதய தேசமான ஜப்பான் ஒருபுறம் அதிநவீனத் தொழில்நுட்பத்திலும், மறுபுறம் பாரம்பரியக் கலாசாரச் செழுமையிலும் முன்னிலையில் உள்ளது. நீண்ட வாழ்நாள் என்றதும் நினைவிற்கு வருவதும் ஜப்பானே. தொடர்ச்சியாக 55ஆவது முறையாக இவ்வருடமும் உலகின் நீண்ட வாழ்நாள் கொண்டோருக்கான பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது ஜப்பான்.
114 வயது நிரம்பிய சிக்கேகோ காகவா எனும் ஜப்பானிய மூதாட்டி, தன் 86ஆவது வயது வரை மகப்பேறு நிபுணராகப் பணியாற்றினார். தன் 109ஆவது வயதில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் ஓட்டத்தில் பங்கேற்றார். அவ்வாறே 111 வயதான கியோடாக்கா மிசுனோ எனும் முதியவர், பல்வேறு சமூகப் பணிகளில் தொடர்ந்து பங்கேற்று முதுமையிலும் வலிமையாக இயங்கலாம் என எடுத்துக்காட்டி வருகிறார்.
2025 செப்டம்பர் மாத நிலவரப்படி ஜப்பானில் 99,763 பேர் நூறு வயதைக் கடந்திருக்கிறார்கள் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் 88 சதவீதம் பேர் பெண்கள். 2023 மற்றும் 2024 புள்ளி விவரங்களின்படி, பெண்களுக்குச் சராசரி வாழ்நாள் 87 ஆண்டுகளுக்கு மேல் எனவும், ஆண்களுக்கு 81 ஆண்டுகளுக்கு மேல் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. உடல் பலவீனத்தோடோ மருத்துவ உதவியுடனோ வாழ்வோரின் சராசரி வாழ்நாள் பெண்களுக்கு 75 ஆண்டுகள் எனவும், ஆண்களுக்கு 72 ஆண்டுகள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.















Add Comment