ஃபிரான்ஸ் நாட்டின் பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த அக்டோபர் 19ம் தேதி பழம்பெரும் நகைகள் பல கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. உலகிலேயே அதிநவீனப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகக் கருதப்படும் அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் சில நிமிடங்களில் நடந்த இந்தக் கொள்ளை எப்படிச் சாத்தியமானது? கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்ன? அதில் என்ன வரலாற்றுச் சிறப்பம்சம்? இதுபோன்ற பழம்பொருள்களின் கொள்ளைக்கு விற்பனைச் சந்தை எங்கிருக்கிறது? பார்க்கலாம்.
டான் பிரவுனின் ‘டாவின்சி கோட்’ நாவலில் இந்த வரி வரும், ’பாரீஸின் முகத்தில் அமைந்த கறை ’ (A Scar in the face of Paris). கறை என்று நாவலின் அந்தக் கதாபாத்திரம் குறிப்பிடுவது, லூவர் அருங்காட்சியக வாசலில் இருக்கும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கண்ணாடிப் பிரமிடு வடிவத்தை. அந்நகரத்தின் பழமையினூடே துருத்திக்கொண்டிருக்கும் ஒரு நவீன வடிவம் என்பது அந்த வசனத்துக்குக் காரணம். இப்போது நடந்திருக்கும் இந்தக் கொள்ளை, நிச்சயமாக பாரீஸ் நகரத்திற்கும் லூவர் அருங்காட்சியகத்திற்குமே கறை போன்று அமைந்துவிட்டது.
ஒரு மரகத நெக்லஸ். இரண்டு மரகதக் காதணிகள், இரண்டு கிரீடங்கள், இரண்டு ப்ரூச்கள் (brooch), நீலமணி (sapphire) கழுத்தணி ஆகியவை கொள்ளை போன பொருள்கள். இவை அனைத்தும் மூன்றாம் நெப்போலியனின் குடும்ப ஆபரணங்கள் என்று தெரியவந்துள்ளன. இதுதவிர ராணி யூஜினின் கிரீடத்தைக் கொள்ளையடித்தும், ஏனோ வழியில் கீழே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.















Add Comment